பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

கல்வி உளவியல் கோட்பாடுகள்


பூச்சாண்டி, பேய் போன்ற தேவையற்ற பயத்தை உண்டாக்கு வதாலும் சிறுவர்களை அச்சப் பேய் பற்றுகின்றது. படக் காட்சிகளில் காணும் பயங்கர நிகழ்ச்சிகள், சில செய்தித் தாள்களில் காணும் கோரச் செய்திகள், சில ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் போன்றவை அச்சத்தை வலுப்படுத்தும் கூறு களாகும்,

அச்சத்தின் பயன்கள் : அறிஞர்கள் பலர் அச்ச உணர்ச்சியைக் கடிந்து கூறினாலும், அச்சத்தினாலும் பயன் உண்டு என்பது அறிதற்பாலது. அச்சம் விபத்திலிருந்து தடுக்கின்றது; முரட்டுத்தனத்தை அடக்குகின்றது; செயலில் விழிப்புடனிருக்க உதவுகின்றது. வாழ்க்கையில் பல நிலைகளில் எச்சரிக்கையாக நின்று பயன் அளிக்கின்றது. (எ.டு) பள்ளி செல்லக் கால தாமதம் ஆகிவிடும், திங்கள் இறுதி வரைக் கடனின்றிக் காலத் தள்ளுதல், தேர்வில் தோல்வியடையாதிருத்தல் போன்ற எண்ணங்களை உண்டாக்குதல். எதிரதாக் காக்கும் அறிவு அச்சத்தைப் பற்றுக்கோடாகக் கொண்டே எழுவது. தெனாலிராமனின் சூடுண்ட பூனை பாலைக் கண்டு அஞ்சுவது போல, பலர் சொல்லியும் கேளாத ஒருவன் ஒரு தடவை துன்பத்தில் உழன்று தப்பிப் பிழைத்தால், அதனால் வரும் அச்சம் அவனுக்கு என்றும் வழிகாட்டியாக அமையும். குழவிகள் அச்சத்தின் கட்டுப்பாடின்றி தம் திறமைக்கு மிஞ்சிய செயல்களை மேற்கொண்டு இடரெய்துவதைக் காண்கின்றோம். வள்ளுவப் பெருந்தகையும்,


அஞ்சுவது அஞ்சாமை பேதமை; அஞ்சுவ(து)
அஞ்சல் அறிவார் தொழில்’’.[1] -

(அஞ்சுதல் - எண்ணித்தவிர்தல்; அஞ்சாமை. எண்ணாது செய்து நிற்றல்.) - என்று கூறியிருத்தலை எண்ணி ஒர்க.

அச்சத்தால் பல நற்பயன்கள் ஏற்படினும், சில தீப்பயன்களும் உண்டாகின்றன. சிலர் அச்சத்தால் சொல்லொணாத் துன்பம் அடைகின்றனர். சிலர் இல்லாதனவற்றையெல்லாம் கருதி அஞ்சி அஞ்சிச் சாகின்றனர். அச்சத்தின் மிகுதியால், சில சமயம் ஒடித் தப்ப வேண்டிய பொழுதும், ஒடுவதற்கும் வலியற்றுத் தவிப்பர்.

அச்சத்தைத் தடுத்தலும் சமாளித்தலும் : உலகில் அச்சத்திற்கு ஒர் இடம் உண்டெனினும், வீண் அச்சங்கள் எழுப்புதல்


  1. 39. குறள்-428.