பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊக்குநிலையும் உள்ளக்கிளர்ச்சிகளும்

191


களிடமே முருகுணர்ச்சி அமைந்து கிடக்கின்றது. இந்தப் பொம்மை அழகாக இருக்கின்றது", அந்தப் பொம்மை அழகாக இல்லை என்பன போன்ற குழந்தைகளின் கூற்றுகளிலிருந்தே இதனை அறியலாம். இசையில் இன்பத்தையும், அழகான பொருள்களின் வனப்பையும், பாடல்களின் சொற்சுவையையும் பொருட் சுவையையும், கட்டடங்கள், ஒவியங்கள், சிற்பங்கள் போன்றவற்றையும், இயற்கை அழகையும், ஆண்டவன் படைப்பு மேன்மையையும் மாணாக்கர்கள் துய்ப்பதற்கு வாய்ப்புகள் தரவேண்டுமென்பது இன்றைய கல்வியின் நோக்கம். அழகு" மனிதனது உயர்ந்த வெளியீடு என்பதை மறத்தலாகாது. தமிழ் மக்களது அழகுணர்ச்சியே-முருகுணர்ச்சியே-முருகன் என்ற கடவுள் வடிவம் பெற்றது என்பது சண்டு சிந்திக்கற்பாலது. பள்ளிசூழ்நிலை, வகுப்புச் சூழ்நிலை, விழாக்காலங்களில் பள்ளியை அணி செய்யும்முறை, பள்ளியமைதி, ஒழுங்குமுறை போன்றவை மாணாக்கர்களுக்கு அழகுச் சுவையை உணர வாய்ப்புகள் தரும், இசையில் பயிற்சியும் கவிதைகளிலுள்ள உணர்ச்சிக் கூறினை எடுத்துக்காட்டலும் இதற்குப் பெருந் துணை புரியும். .

இரண்டாவது அறிதல்நிலை: இதில் ஆசிரியர் மிக விழிப்பாக இருக்க வேண்டும். இது அழகுள்ளது. அது அழகற்றது என்று ஆசிரியர் தம் கருத்தினை மாணாக்கர்ப்ால் வலிந்து திணித்தல் கூடாது. பொருள்கள் அழகாக இருப்பதற்கும் சில கூறுகள் உள. அவற்றை மாணாக்கர்களே காணும்படி செய்தல் வேண்டும். ஒரு குழந்தை ஒரு பொருளின் அழகை உணர்தலுடன் மனநிறைவு பெற்றால், அதை அப்படியே விட்டு விடவேண்டும்; அதைப்பற்றிக் கூறவோ, காரணங்கள் தருமாறு கட்டாயப் படுத்தவோ கூடாது. சுவையறிவுக் கல்வியில் நேர்முறைக் கற்பித்தல் கூடாதாயினும், ஆசிரியர் இதனை ஒத்துணர்ச்சி[1]: கருத்தேற்றம்[2]' என்றவற்றின் துணையால் மிகத்திறமையாகக் கையாளலாம். எடுத்துக் காட்டாக,

தங்கம் உருக்கித் தழல்குறைத்துத் தேனாக்கி
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ?

என்ற காலை இளம்பரிதியின் எழிலைக் காட்டும் அடிகளைப் படிக்கும்போதே ஒத்துணர்ச்சியாலும், இயற்கைக்காட்சியின் வனப்பை எடுத்துக்காட்டி விளக்கந் தருங்கால் கருத்தேற்றத்' தாலும் மனத்தின் அறிவு நிலைக்கு முறையீடு செய்யலாம். இதற்கு ஆசிரியரும் உண்மையான சுவைஞராக இருத்தல்


  1. 53.ஒத்துணர்ச்சி-Sympathy.
  2. 54.-கருத்தேற்றம்Suggestion.