பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

கல்வி உளவியல் கோட்பாடுகள்


வேண்டும் அங்ஙனம் அவர் இராவிடின் அவர் எஞ்ஞான்றும் மாணாக்கரிடையே சுவையை வளர்க்க முடியாது. ஆசிரியர் அதுபவிப்பதை மாணாக்கரும் ஒத்துணர்ச்சியால் அநுபவிப்பர்; உண்மையான உற்சாகம் தொற்றுநோய்போல் அவரைப் பற்றிக் கொள்ளும். சுவையூட்டுவதில் ஆசிரியரின் மனப்போக்கு முக்கியமானதேயன்றி, அவர்கூறும் செய்தி அன்று.

மூன்றாவது இயற்றிநிலை: பாடகரே இசைக்கலையை மதிப்பிடமுடியும் என்பதும், இயற்றிய ஆசிரியனே இலக்கியத்தை மதிப்பிடமுடியும் என்பதும் பொதுவாக ஒப்புக்கொண்ட உண்மைகள். ஆனால், முற்றிலும் இஃது உண்மையன்று; இசைக் கச்சேரியைக் கேட்டுத் துய்ப்போரும் நன்முறையில் இலக்கியத்தைப் படித்துத் துய்ப்போரும் இதனை ஒப்புக்கொள்ளார் ஆனால், கலைகளைப் பார்த்து அவற்றைப்போலவே சாயல் பிடிப்பவர்களிடம்" [1]மதிப்பிடும் திறமை அதிகமாகவுள்ளது என்பதை நாம் நிச்சயம் ஒப்புக்கொள்ளலாம். நம்மில் பெரும் பாலோர் சிறிதளவு பாடலாம்; சிறிதளவு ஒவியம் வரையலாம்; சிறிதளவு வண்ணப்படம் தீட்டலாம், சிறிதளவு கவிதை புனையலாம், அல்லது நூல்கள் எழுதலாம். இப்பழக்கம் நிச்சயம் நம் சுவை வளர்வதற்குப் பெருந்துணை புரியும். எனவே, இத்தகைய பழக்கங்களைச் சிறு வயதிலிருந்தே மாணாக்கர்களிடம் ஏற்பட, வளர, அவர்களுக்கு உற்சாகம் ஊட்டவேண்டும். இதில் மாணாக்கர்கள் வியத்தகு முறையில் முன்னேற்றம் அடைவதை நாம் நடைமுறையில் காணலாம். ஒரு கவிதை உணர்ச்சி வழியும்படி இசையுடன் படித்தலும் அதனைச் சுவைப்பதற்கு அறிகுறியாகும். அங்ங்னம் படிக்கும் பொழுது அவர்கள் கவிஞனிடம் எழுந்த உணர்ச்சியையே எட்டிப் பிடிக்கவும்கூடும். இம்முறையில் இயற்றிநிலையில் செய்தற்கூறு[2]' சுவைகாணலில் இன்றியமையாததாகின்றது.

உள்ளக்கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல்

உள்ளக்கிளர்ச்சிகளே நமக்கு ஆற்றல் அளிக்கும் விசைகள் என்பதை மேலே கண்டோம். உள்ளக்கிளர்ச்சிகளைத் தக்க முறையில் கட்டுப்படுத்திச் செயலை எழுப்பி, நிறுத்தி, நெறிப் படுத்துவதே நாகரிக முறையாகும். ஓரளவு கல்வி பெற்றவர்கள் உள்ளக்கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி நன்முறையில் நடந்து கொள்வார்கள் என்று பாமரர்களும் எதிர்பார்க்கின்றனர்.


  1. 55. சாயல் பிடிப்பவர்.Imitator
  2. 56.செய்தற்கூறு--Doing element,