பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

கல்வி உளவியல் கோட்பாடுகள்


குழந்தைகளும் பிராணிகளின் குட்டிகளும் தங்கள் விளையாட்டில் பழகுகின்றனர் என்பது இக் கொள்கை, பூனைக்குட்டி அசையும் பொருள்களைக் கண்டு விரட்டுதலும், நாய்க்குட்டிகள் சண்டையிட்டுக் கொள்ளுதலும், சிறுவன் போர் வீரனாகவும் சிறுமி பொம்மை பராமரிப்பு செய்பவளாகவும் விளையாடும் விளையாட்டுகளும் இக்கொள்கைக்கு எடுத்துக்காட்டுகளாகும். ஆனால் கண்ணாம்பூச்சு, கல்லெறிதல் போன்ற விளையாட்டு களை இக்கொள்கையால் விளக்க இயலவில்லை.

ஆதிகாலச் செயல்களுக்குத் திரும்பும் கொள்கை[1]: இக் கொள்கைப்படி மனித பரம்பரை பல்லூழி காலத்தில் அடைந்த அநுபவங்களைக் குழந்தைகள் தம்முடைய குழந்தைப் பருவத்தில் திரும்பவும் அடைகின்றனர். நாகரிகம் அடைந்த காலத்திலும் குழந்தைகள் ஆதிகால மனிதர்களின் செயல்களில் ஈடுபடுகின்றனர். விளையாட்டில் மரம் தொற்றுதல், வேட்டையாடுதல், குகையமைத்தல், மீன்பிடித்தல் போன்றவற்றைக் காண்கின்றோம். தாய்வயிற்றில் குழந்தை கருநிலையில் இருக்கும்பொழுது படிப்படியாகக் கீழ்நிலை உருவகங்களை அடைவதைக் காண்கின்றோம். இயற்கைப்பண்புகள் குடிவழி முறையாக உடலோடு பிறப்பது இயல்பே. ஆனால், மரம் தொற்றுதல், வேட்டையாடுதல் போன்றவை செயற்கைப் பண்புகள். மேலும், சொக்கட்டான் ஆடுதல், சீட்டாடுதல் போன்ற அறிவுடன் தொடர்பு கொண்ட விளையாட்டுகளுக்கு இக்கொள்கை விளக்கம் தரவில்லை.

காலுதற் கொள்கை[2]: இக் கொள்கையை முதன் முதலில் கையாண்டவர் அரிஸ்டாட்டில் என்ற அறிஞர். துன்பியல் நாடகத்தைத் திறனாய்ந்த பொழுது இக்கொள்கை கையாளப்பெற்றது. பேதிமருந்து உடலிலிருந்து வேண்டாத பொருள்களை அகற்றுதல் போலவே, ஆன்மாவைச் சூழ்ந்துள்ள அழுக்குப் பொருள்களைத் துன்பியல் நாடகங்கள் அகற்றுகின்றன என்பது இவர் கொண்ட கொள்கை. ஒரு துன்பியல் நாடகத்தைக் காணும்பொழுது நம்மிடம் தேங்கிக் கிடக்கும் சில உணர்வுகள் செயற்பட்டு வெளிப்படுகின்றன. நாமும் கதைத் தலைவனுடைய உணர்வுகளைப் பெறுகின்றோம்; அவன்படும் துன்பங்களையெல்லாம் நாமும் ஓரளவு அநுபவிக்கின்றோம். அவனிடம் நடைபெறும் உணர்வுப் போராட்டம்


  1. ஆதிகாலச் செயல்களுக்குத் திரும்பும் கொள்கை. Recapitulation theory.
  2. காலுதற்கொள்கை-Cathartic theory.