பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

கல்வி உளவியல் கோட்பாடுகள்


தவை என்பதை எண்ணும்பொழுது நாம் வியப்புக்கடலில் ஆழ்கின்றோம்.

கற்றல் மூன்று நிலைகளில் ஏற்படுகின்றது. அவை: முற்றுதல்[1], அநுபவம், தன்னியக்கம் என்பவை. இவற்றைச் சிறிது விளக்குவோம்.

முற்றுதல்: கற்றலுக்கு முதல்நிலையாக வேண்டப்பெறுவது முற்றுதல். அஃதாவது, உடலுறுப்புகள், மூளையின் பகுதிகள் ஆகியவற்றில் தகுந்த வளர்ச்சி ஏற்படுதல் வேண்டும். பக்குவம் அடைந்த பிறகே இயக்கம் பயன்படும். சிறுதேர் உருட்டும் பருவத்தில் நடை வண்டியைக் கொண்டு குழந்தைக்கு நடக்கக் கற்பிக்கின்றோம். நமக்கு நடத்தல் எளிதாகத் தோன்றலாம். ஆனால் நடத்தலில் பங்குகொள்ளும் உறுப்புகள் பக்குவப்படாவிட்டால், நடத்தலைக் கற்பிக்க இயலாது. நடத்தல் மிகச் சிக்கலான செயல். குழந்தை நடப்பதற்குத் தலையை நிலை நிறுத்தவும், உடலை நிமிர்த்தி நிலைநிறுத்தவும், கால்களின்மேல் சமநிலையில் உடலை நிலைநிறுத்தவும், கால்களை ஒன்றன்பின் ஒன்றாக இயங்கவும் செய்யவேண்டும். எலும்புகளும், தசைகளும், நரம்புத் தொகுதியும் தகுந்த பக்குவமடைந்தபிறகே இவ்வியக்கங்களின் சேர்க்கை உண்டாகும். பக்குவம் அடைந்தபிறகு ஏற்ற இயக்கம் தானாகவே எழும். பிறகு வேண்டுவது பயிற்சியே. முற்றுதல் பயிற்றலுக்குத் தொடக்க நிலையாகும். பயிற்றலின் விரைவும் அகலமும் முற்றுதலால் பாதிக்கப்பெறுகின்றன. எனவே, குழந்தை எப்பொருளையும் அறியப் பக்குவம் எய்துவதற்குமுன் கற்பித்தல் வீணாகும். குழந்தையின் முற்றுதலுக் கேற்றவாறு கற்பித்தல் அமையின் அது குழந்தைக்கு மகிழ்ச்சியையும் தரும்; அதனால் பயனும் விளையும். எனவே, இந்நூல் முழுவதும் வளர்ச்சிப்படி வற்புறுத்தப்பெறுகின்றது. குழந்தையின் ஒவ்வொரு பருவத்திற் கேற்றவற்றையே நாம் கற்பிக்கவேண்டும்.

அநுபவம்[2]: அநுபவத்திற்கேற்பக் கற்றலும் வளர்கின்றது. முன்னைய அதுபவம் பின்னைய இயக்கத்தை அறுதியிடுகின்றது என்பதை நாம் நினைவிலிருத்த வேண்டும். சூடுண்ட குழந்தை தீயினைக் கண்டு அஞ்சுகின்றதன்றோ? அநுபவத்தைக் கொண்டே நாம் தேர்ச்சி பெறுகின்றோம்; கற்கின்றோம். கூர்ந்த மதியுடையவன் முன்னைய அநுபவத்தால் சிறந்த


  1. முற்றுதல்-Maturation
  2. அநுபவம் - Experience.