பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்றல்

209


செயலை ஓரளவு கவனிக்கின்றோம். இங்கு பிரச்சினையை நாம் நேராகத் தாக்குவதால், உற்று நோக்குதல் அதிக அளவு நிகழ்கின்றது. மேற்கூறிய இரண்டு முறைகளையும்விட இது பிரச்சினையை நேராக அணுகுவதால், இம்முறை அவற்றை விடச் சிறந்ததாகின்றது. இதில் நாம் தசைகளை இயக்குவதுடன் புலன்களையும் பயன்படுத்துகின்றோம். தன்னம்பிக்கையுடன் பிரச்சினையின் கூறுகளை ஒருவாறு அறிகின்றோம்.

நான்காவது: ஆக்கநிலை ஏற்றிய மறிவினை[1]. பாவ்லோவ்'[2] என்ற இரஷ்ய அறிஞரும்,வாட்சன்[3] என்ற அமெரிக்க அறிஞரும் கற்றல் அனைத்தும் மறிவினைச் செயல்களின் தொகுதியே என்கின்றனர். நாயின் வாயில் உணவு சேர்ந்தவுடன் உமிழ்நீர் ஊறுதல் இயற்கை மறிவினையாகும். உணவிடும் போதெல்லாம் ஒரு மணியோசையை எழுப்பி வந்தால் உணவிடுதலும் மணியோசையும் இயைபு பெற்று முற்கூறிய தூண்டலின் துலங்கலாகிய உமிழ்நீர் ஊறுதல், பிற்கூறிய தூண்டலின் துலங்கலாகி விடுகின்றது. உணவின்றி மணியோசையை மட்டிலும் எழுப்பினாலும் நாயின் வாயில் உமிழ்நீர் ஊறுகின்றது. இதைக் கற்றமறிவினை அல்லது ஆக்கமறிவினை என்பர். மனிதரிடமும் இத்தகைய ஆக்கமறிவினைகள் ஏற்படுகின்றன. ஒரு தாய் ஒரு குழந்தையிடம் பந்தைக் கொடுத்தால், அஃது அதனைத் தடவிப் பார்க்கின்றது. அப்போதே 'பந்து, பந்து' என்று அவள் உரைத்தால் அதுவும் அப்பெயரை அப்பொருளுடன் தொடர்புறுத்தி, அதனைக்கண்ட பொழுதெல்லாம் 'பந்து' என்கின்றது. இங்ஙனமே, ஆக்கமறிவினை முறையில் மொழியறிவு உண்டாகின்றது. இவ்வாறே நம் விருப்பப் பொருள்களும், வெறுப்புப் பொருள்களும், அச்சம் போன்ற உள்ளக்கிளர்ச்சிகளும் அமைகின்றன என்பர் உளவியலறிஞர்கள்.

ஐந்தாவது: உள்நோக்குவழிக் கற்றல் [4]. இது மேற்கூறிய நான்கையும்விடச் சிறந்த முறையாகும். இது முழு நிகழ்ச்சியையும் ஊன்றிப் பார்த்தும், விவரங்களின் இடைத் தொடர்பு, காலத் தொடர்பு, காரண காரியத் தொடர்பு இவற்றை நன்கு அறிந்தும், தடுமாறாமலும், தயக்க மின்றியும், "ஆகா, கண்டு கொண்டேன்" என்ற அநுபவம் தோன்றியும் இயங்கும் கற்றலாகும். தொடர்புகள் நன்கு அறியப்பெறுவதால் பிரச்சினையின் விளக்கம் தோன்றிக் கற்கின்றோம்.


  1. 11. ஆக்க நிலை ஏற்றிய மறிவினை-Conditioned reflex.
  2. 12.பாவ்லோவ்-Pavlov
  3. 13. வாட்சன்-Watson
  4. 14.உள்நோக்குவழிக் கற்றல்-Learning by insight

க.உ.கோ.-14