பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

கல்வி உளவியல் கோட்பாடுகள்


ஏற்படுவதைப்பற்றி ஓர் இயக்கமே நடத்தியுள்ளார். அதைப் பற்றி அவர் பல நூல்களையும் எழுதியுள்ளார்.

ஆளுமை ஒருமைப்பாடு: ஆளுமை வளர்ச்சி வெற்று நில்லையில் தோன்றாது; தகுந்த சூழ்நிலையில் நடைபெறும் இடை வினையின் மூலமாகவே அது வளரும். இச்சூழ்நிலையில் வேலை முக்கிய இடம் பெறுகின்றது. ட்யூவியின் கருத்துப்படி தொழில் என்னும் சொல்லில் உடலுழைப்பும் ஊதியத் தேட்டமும் மட்டுமின்றி, கலைத்திறன், அறிவியல் திறன், பயனுடைக் குடிமை, உயர் தொழில், வணிகத்தொழில் முதலியவையும் அடங்கும்.

ட்யூவியின் கருத்துப்படி ஒரு சமூகத்தில் மனத்தோடு தொடர்புடைய தனிச் செயல்கள் தொழில்களே. அவை அடிப்படைச் செயல் வழக்காறுகளை அமைத்து அவற்றின்மூலம் நமது பழக்கங்களைக் கட்டுப்படுத்தி வளர்க்கின்றன. இப்பழக்கங்கள் வெளிப்படையான நடைமுறைச் செயல்கள் மட்டிலுமன்று; அவை வாழ்க்கை மன நிறைவையும் அளிப்பவை. வெற்றிக்கும் தோல்விக்கும் நிலையாக அமைபவையும் அவைகளே. ஆகையால், அவை உயர் மதிப்புகளை வகுப் பதற்கும் வரையறுப்பதற்கும் அன்றாட முயற்சியில் துணை செய்கின்றன. தொழில்கள் வேட்கைகளைக் கட்டுப்படுத்து கின்றன; முக்கியமான பொருள்களையும் கவர்ச்சிகரமான பண்புகளையும் எடுத்துக்காட்டுகின்றன. இங்ங்னம் மன வாழ்க்கையின் உள்ளக்கிளர்ச்சிக் கூறும் அறிவுக்கூறும் நெறிப் படுத்தப்பெறுகின்றன.

வேலை மூலம் கற்பதால் மாணாக்கன் ஆக்கத்தொழில்களில் பங்கெடுத்து அவற்றைப்பற்றி ஆராய்கின்றான். அடியிற் கண்டவாறு அவனிடம் திறமைகள், சமூகத் தொடர்பு, ஆளுமை ஒருமைப்பாடு வளர்வதற்குரிய பிற அநுபவங்களும் அமையும்.

(1) பள்ளியில் சொந்த நலனுக்குப் பதிலாகச் சமூக நெறிப் பாட்டை நிலைக்களமாகக் கொண்டால், வேலை ஒரு சமூகத் தொண்டு என்னும் மனப்பான்மையும், உடல் உழைப்பையும் வேலையையும் பற்றிய மதிப்பும் உண்டாகும்.

(2) வேலை மூலம் கல்வி என்னும் திட்டப்படி உண்மை யுலகச் சமூக அநுபவம் அளிக்கும் சூழ்நிலை கிடைக்கின்றது. வாழ்க்கையின் உண்மை நிலைகளைச் சமாளிப்பதால், அறிதிறன் வளர்ச்சிக்கும் ஆளுமைத் துவக்கத்திற்கும் அடிப்படை அமைகின்றது.