பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்றல்

227


(3) சமூகமும் அதன் நிலையங்களும் நெகிழ்ச்சியுடையவை. மனிதன் தன் கூர்த்த மதியால் அவற்றில் எல்லையற்ற முன்னேற்றத்தை உண்டாக்க முடியும்; மனிதன் ஆக்குவதிலும், செய்வதிலும், முயலுவதிலும் திறம் படைத்தவன்; நம்மைச் சுற்றியுள்ள உலகம் ஓரளவுக்கு மனிதன் கைத்திறனால் படைக்கப்பெற்றதே; அது மாறக்கூடியது. இவை போன்ற பல கருத்துகளை மாணாக்கன் சமுதாய வேலைகளில் பங்கெடுத்துக் கற்கின்றான்.

இங்ஙனம் பழையமுறைக் கல்வியில் இல்லாத ஆளுமை ஒருமைப்பாட்டிற்குரிய பல அநுபவங்கள் வேலை மூலம் பெறும் கல்வியில் கிடைக்கின்றன.

அநுபவத்தின் மூலம் கல்வி

நடைமுறைக்கல்வி பெரும்பாலும் சொற்களையும் குறியீடுகளையுமே கையாளுகின்றது. கற்றலுக்கும் குழந்தைகளின் அநுபவத்திற்கும் சிறிதும் தொடர்பு இல்லை. இதனால் தற்காலக் கல்வி அறிஞர்கள் பொருள்களைப்பற்றி நேரில் அதுபவம் மூலம் கற்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். குழந்தைகளின் ஆர்வம், அவர்களின் இயக்கம், அவர்களின் உரையாடல், அவர்களின் சிந்தனை ஆகியவைகளே முக்கியம். இவை இளைஞர்களின் தன் முயற்சிக்கு இடந்தருவதால் கற்றல் மகிழ்ச்சியுடன் நடைபெறுகின்றது. நடைமுறைக் கல்வியால் பெறும் தன்வயமாக்கப் பெறாத செய்திகளும், செய்தித் துணுக்குகளும் குழந்தைகட்கு யாதொரு பயனும் தருவதில்லை. அவை அவர்களின் வாழ்க்கைக்கு எள்ளளவும் பயன்படுவதில்லை. அவற்றைக் கொண்டு குழவிகள் யாங்ஙனம் சூழ்நிலையுடன் பொருத்தப்பாடு அடைதல் முடியும்?

கற்றலுக்கும் அநுபவத்திற்கும் இடையேயுள்ள தொடர்பை உளவியலாரையும் கல்வி வல்லாரையும் தவிர, அறிவுடைய பெரியோர்கள் யாவரும் அறிவர். இதனைப் புலவர்களும் பெருந்தலைவர்களும் அழகாக எடுத்துக் கூறியுள்ளனர். பெஸ்டலாஸ்ஸி[1] என்ற அறிஞர் இதனை சொற்களுக்கு முன் பொருள்கள் என்று இரத்தினச் சுருக்கமாக எடுத்துக் கூறியுள்ளார். பொருள்களை ஆராய்வதால்தான் உண்மையறிவு ஆண்டாகின்றது" என்று கூறுவர் கன்பூஸியஸ்[2] என்ற அறிஞர்.


.

  1. பெஸ்டலாஸ்ஸி-Pestalozzi
  2. கன்பூஸியஸ்-Confucius