பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

கல்வி உளவியல் கோட்பாடுகள்




உளவியலுக்கும் கல்வி உளவியலுக்கும் உள்ள தொடர்பு

உளவியல் என்பது உயிரிகளின் நடத்தையையும், அவை எவ்வாறு பல்வேறு விதமாக மாறும் இயல்புள்ள தூண்டல் களுக்கேற்றவாறு எதிர்வினைகள் புரிகின்றன என்பதையும் விரித்துரைக்கும் நூலாகும். அது மக்கள் நடத்தையையேயன்றி, பிராணிகளின் நடத்தையையும் எடுத்துக் கூறும். ஆகவே, உளவியல் வல்லார் எலிகள், பூனைகள், வாலில்லாக் குரங்குகள்:[1] போன்றவை எவ்வாறு சிக்கறைகளில்[2] ஓடுகின்றன என்பதுபற்றியும், அது போன்ற செயல்கள் புரிவது பற்றியும் சோதனைகள் நடத்துவதில் அதிகக் காலத்தைச் செலவிடு கின்றனர்; அங்ஙனமே மக்கள் எல்லாவித நிலைமைகளுக் கேற்றவாறு எங்ஙணம் எதிர்வினை புரிகின்றனர் என்பதையும் ஆராய்கின்றனர்; இத்தகைய வாய்ப்புகளை ஆய்வகத்தில் ஏற்படுத்தி, அவற்றில் தனியாள் புரியும் துலங்கல்களைக் கருத்துடன் பதிவு செய்கின்றனர். இதன் விளைவாக அவர்கள் வளர்ந்த மனிதனின் செயல்களை (எ-டு-புலன்காட்சி, கற்பனை, சிந்தனை, கவனம், உள்ளக் கிளர்ச்சி, பற்று, முயற்சி போன்றவற்றை) விளக்குவர். ஆகலின், பொது உளவியல் வளர்ந்தவர்களின் செயல்களை விளக்கும் நூலாகும்.

கல்வி உளவியல் கோட்பாடு நடைமுறையில் காணும் விதி களை எடுத்துரைப்பது பயன்முறை உளவியல்.[3] பொது உளவியலில் கண்ட உண்மைகள் கல்வித் துறையில் கையாளப் பெற்றன. இதனால் கற்பவர்களின் இயல்பும் செயல்களும் விளக்கம் பெற்றன. இதனால் அது கற்றலுக்கும் பயிற்றலுக்கும் உரிய கோட்பாடுகளை விளக்கும் நூலாயிற்று. அது சில காலமாகச் செழித்தோங்கித் தனித்துறையாய்ச் சிறப்புற்று வருகின்றது. இன்று அது பொது உளவியலுக்கே சில உண்மை களை எடுத்தியம்பும் நிலையையும் பெற்றுள்ளது. குழந்தைகள்: இளைஞர்கள், வளர்ந்தவர்கள் போன்ற யாவரும் கற்கும் நிகழ்ச்சிகளில் தோன்றும் செயல்களை எடுத்துரைக்கின்றது; கற்றலின் இயல்பு, வகைகள், முறைகள், சாதகமான ஏதுக்கள், கற்றலின் போக்கு முதலிய கூறுகளையும் விளக்குகின்றது. எனவே, கல்வி உளவியல் கல்விக்கலைக்கும் பொது உள வியலுக்கும் இடைப்பட்ட துறை என்று வழங்கினும் தவறன்று.


  1. 23. வாலில்லாக் குரங்கு-Chimpanzee.
  2. 24.சிக்கறை -Maze.
  3. 25,பயன்முறை உளவியல்.-Applied psychology.