பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

கல்வி உளவியல் கோட்பாடுகள்


யாட்டுத் துடிப்பால் காக்கப்பெறுகின்றது. பாவனை உலகில் தானும் அவனைப்போலாகின்றது; எல்லா இடர்ப்பாடுகளும் இதனால் தாமாகவே நீங்குகின்றன. குழந்தையிடம் இவ்விளையாட்டு வளருங்கால் ஒன்றன்பின் ஒன்றாகப் பல இயல்பூக்கங்கள் கிளர்ந்தெழுவதைக் காணலாம். வண்டிபுனைதலில் கட்டுக் கத்தில் அக்கறையும், குதிரைக்கு ஆணைகள் தருவதில் முதன்மை யூக்கத்தில் தன் மேம்பாட்டை வலியுறுத்தும் அக்கறையும், எதனைக் கூடையாகப் பயன்படுத்துவது என்பதில் விடுப்பூக்க அக்கறையும் இருப்பதைக் காணலாம். எனவே (2) குழந்தையிடம் இயல்பாக அமைந்திருக்கும் உளப்போக்குகளே உறைப்பாக[1] அமைந்திருக்கும் அக்கறைக்கு முதல் மூலங்களாகும்; இவையே தொடக்க ஆண்டுகளில் குழந்தையின் கற்றலுக்குத் துணை செய்கின்றன.

நாளடைவில் குழந்தையிடம் பயின்ற கவர்ச்சிகளும்[2] தோன்றுகின்றன. இளங்குழவிகள் இயங்கும் பொருள்களின்மீது அக்கறை கொள்ளுகின்றன: பெரும்பாலும் இது விடுப்பூக்கத்தின் விளைவாக இருக்கலாம். இவற்றைத் தாமே இயக்கவல்லவர்களாக இருந்தால், இந்த அக்கறை இன்னும் அதிகமாகின்ற்து. காரணம், இது அவர்களின் முதன்மையூக்கத் துடிப்பை அதாவது அதிகாரத்தின்மீதுள்ள விழைவைத் திருப்தி செய்கின்ற்து. இவ்வாறு அவர்கள் குழலிலிருந்து நீர் வீழ்வதிலும் ஒரு கலத்திலிருந்து பிறிதொரு கலத்திற்கு நீர் வார்ப்பதிலும் அக்கறை காட்டுகின்றனர். ஒரு நாள் ஓர் ஊற்றுப்பேனாவுக்கு மை நிரப்புவதையும் அப்பொழுது முள் தலைகீழாக இருப்பதையும் ஒரு குழந்தை காண்கின்றது. அதனுடைய முன்னதுபவத்தால் மை கீழே வழியும் என எதிர் பார்க்கும்படி தூண்டப்பெறுகின்றது. உடனே ஊற்றுப்பேனா குழந்தை விழையும் பொருளாகின்றது. எனவே (3) குழந்தைகள் கற்கும் நிலையில் அவற்றிடம் இயல்பாக அமைந்துள்ள ஆதி இயல்பூக்கக் கவர்ச்சிகள் புதிதான பயின்ற கவர்ச்சிகளால் வலுப்பெறுகின்றன.

குழந்தையின் மன வாழ்க்கை மிகவும் சிக்கலானது. அதனிடம் ஒரு திட்டமான அக்கறை உள்ளது என்று சொல்வதற்கில்லை. அச்சம், விருப்பு, இறுமாப்பு, கீழ்ப்படிதல் போன்ற முரண்பட்ட உள்ளக் கிளர்ச்சிகளின் மோதல்கள் புதியனவாக. உண்டாகும் கவர்ச்சிகளால் மேலும் சிக்கலாகின்றன. சிறப்பாகத் தன் விருப்பு வெறுப்புகளாலும், பிறர் தலையீட்-


  1. உறைப்பாக-intense
  2. பயின்ற கவர்ச்சிகளும்-Acquired interests.