பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள்

235


நிலைகளிலும் கவர்ச்சிகளில் என்ன வேற்றுமைகள் தோன்றுகின்றன என்றும் உணர்தல் வேண்டும். குழந்தையை நடுவாக வைத்தே கற்பித்தல் நடைபெறுதல் வேண்டும்; பாடத்திற்குக் குழந்தையைப் பொருத்துதல் கூடாது. தலைக்கேற்றது. குல்லாயேயன்றி, குல்லாய்க் கேற்றது தலை அன்று. ஆசிரியர் குழந்தைகளிடம் நன்முறையில் கலந்து பழகி, அவர்களுடைய திறன்களையும் மன வளர்ச்சியையும் நன்கு அறிந்து, அவற்றிற்கேற்றவாறு தம் பாடப்பொருள்களையும் கற்பிக்கும் முறைகளையும் வகுத்துக்கொள்ளவேண்டும். குழவிகளின் விடுப்பூக்கத்தையும் நன்முறையில் வளர்த்து அவர்களின் அறிவுப் பசியை என்றும் தணியாது பாதுகத்தல்வேண்டும்.

இரண்டாவதாக: மாணாக்கன் தான் கற்பதன் நோக்கத்தையும் கற்றலின் பயனையும் உணராவிட்டால் அவர்களிடம் கவர்ச்சி கிளர்ந்தெழாது. அப்படி எழுந்தாலும் அது நிலைத்து நிற்காது. அறிவியல், இலக்கணம், கணக்கு போன்ற பாடங்களில் பெரும்பாலான ஆசிரியர்கள் சாதாரண செய்திகளைக் கொண்டு அன்றாட வேலையைத் தொடங்குகின்றனர். இதனால் மாணாக்கர்கள் தாம் பெறும் புதிய அறிவின் தேவையையும் அதன். பயனையும் நன்கு அறிகின்றனர். இப் பாடங்களை மாணாக்கர்கள் அதிக அக்கறையுடனும் கவனிக்கின்றனர்.

மூன்றாவதாக: மாணாக்கன் பெறும் புது அறிவு அவனிடம் முன்னரே அமைந்து கிடக்கும் பழைய அறிவுடன் தொடர்பு கொள்ளவேண்டும். ஆசிரியர் மாணாக்கர்களின் அறிவை மிக நெருங்கி அறிந்து அதற்கேற்றவாறு தம் பாடங்களை வகுத்து பழைய அறிவின் தொடர்ச்சிதான் புதிய அறிவு என்பதை அவர்கள் உணரச் செய்தல்வேண்டும். -

நான்காவதாக: ஆசிரியர் பாடத்தில் ஓர் அலுப்பு[1] தோன்றாதவாறு விழிப்பாக இருத்தல்வேண்டும். அலுப்பு கவர்ச்சியைச் சிதைத்துவிடும். பல திறம் படைத்தல் கவர்ச்சியைப் பாதுகாக்கும்; ஒவ்வொரு பாடமும் புதிய புதிய கோணங்களில் செல்ல வழிவகைகளைக் காணவேண்டும். பாடப் பொருளை அடிக்கடி புதிய முறையில் அமைக்கவேண்டும். அதனை மாணாக்கர் சிந்திக்கும்படியாகத் திருப்பியமைக்க வேண்டும் பாடத்தில் புதிய பார்வை, பாடத்தின் புதிய கூறுக்கு அழுத்தம் தருதல் பழைய பொருளையே புதிய முறையில் அமைத்தல் போன்ற யுக்தி முறைகளால் மாணாக்கர்களிடம் கவர்ச்சி எழச் செய்யலாம்.


  1. அலுப்பு-Monotony.