பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

கல்வி உளவியல் கோட்பாடுகள்


கவனத்தின் பிரிவு[1]: கவனத்துடன் செய்ய வேண்டிய இரு செயல்களை ஒரே சமயத்தில் செய்வதைத்தான் கவனப்பிரிவு என வழங்குகின்றோம். உண்மையில் இவ்வாறு கவனப்பிரிவு என்பது ஒன்று உண்டா என்பது வினா. 'அஷ்டாவதானம்', சதாவதானம் செய்பவர்கள் உண்மையில் தங்கள் கவனத்தை இவ்வாறு பிரிப்பதுபோல் தோன்றினும், அவர்களுடைய கவனம் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு விரைவாகப் பாய்ந்து மீண்டும் அதே செயல்களுக்குத் திரும்புகின்றது. கவனம் பாயும் வேகத்தை நாம் உணர முடியாததால், உண்மையில் கவனம் பிரிவதுபோல் தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக, சில சமயங்களில் நாம் எழுதிக்கொண்டே பேசுவதையும், மிதிவண்டியில் போகும் பொழுதே நண்பருடன் உரையாடுவதையும் கூர்ந்து நோக்கினால் இரண்டு செயல்களில் ஒன்று பொறிச்செயல் போன்று கவனமின்றியே நடைபெறக்கூடியது என்பதை உணரலாம். இரண்டு செயல்களும் கவனத்தை வேண்டினால், கவனம் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு விரைந்து தாவுகின்றது. சிலர் நான்கு கணக்குகளை ஒரே காலத்தில் கவனிக்கிறார்களே! என்றால், அவரது கவனம் ஒன்றிலிருந்து பிறவற்றிற்கு வியத்தகு ஆற்றலுடன் மிக விரைவாகச் செல்லுகின்றது.

கவனமின்மை[2] : குழந்தைகளிடம் கவனமின்மை ஆசிரியர் சமாளிக்க வேண்டிய பிரச்சினைகளில் ஒன்று. கவனம் இல்லையென்றால் கவனமே இல்லை என்பது பொருளன்று. கவனம் ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளுக்குத் தாவுகின்றது; ஒன்றும் நன்றாக கவனிக்கப்பெறாமல் போகலாம். ஒரு வகுப்பிலுள்ள மாணாக்கன் சாளரத்தின் கதவினையும், கூரையின் மீது ஓடும் ஒணானையும், ஆசிரியரின் வழுக்கை மண்டையையும், அடுத்தவன் தூங்குவதையும் முறையே கவனிக்கலாம். எனவே, கவனிக்க வேண்டிய பொருளை விட்டுவிட்டு வேறு எதிலோ கவனமுடைமையே கவனமின்மை என்றாயிற்று.

தோளில் ஆட்டுக்குட்டியை வைத்துக்கொண்டு அதைத் தேடுவதும், ஒக்கலில் குழந்தையிருக்க அதனை ஊர் முழுவதும் தேடுவதும், வகுப்பிலுள்ள மாணாக்கன் ஆசிரியர் வினாவுக்கு 'வால் மாத்திரம் நுழையவில்லை!' என்று மறுமொழி கூறுவதும் எதனால்? கவனமின்மையே. உடல் நலமின்மை நல்ல காற்றின்மை, ஒலிக்குறைவு, உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் தட்டுமுட்டுக்கள், அதிக நேரம் கற்பித்தல், மனம் வேறொன்றில்


  1. கவனத்தின் பிரிவு-Division of attention.
  2. கவனமின்மை-Inattention.