பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

கல்வி உளவியல் கோட்பாடுகள்



பள்ளியில் கற்பனையை வளர்க்கும் வாய்ப்புகள்: மேலே கூறியவற்றால் கற்பனை குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது என்பது பெறப்படும். கீழ்க் கண்ட முறைகளால் பள்ளியில் கற்பனை வளர்வதற்குத் துணை செய்யலாம்.

(1) கற்பனையைத் தூண்டுவித்து வளர்ப்பதற்கு விளையாட்டு எண்ணற்ற வாய்ப்புகளை அளிக்கின்றது. குழந்தைகளும் விளையாட்டை இயல்பாக விரும்புகின்றனர். விளையாட்டில் சிறுவன் பல செயல்களை நடிக்கின்றான். தன் முன்னுள்ள எப்பொருளையும் தான் வேண்டும் பொருளாகப் பாவித்துக் கொள்ளுகின்றான். குழந்தைகள் விளையாடுவதற்கு ஆசிரியர் நல்ல வாய்ப்புகள் தருதல் வேண்டும்.

(2) பாட ஏற்பாட்டிலுள்ள ஒவ்வொரு பாடத்தையும் கற்பனையைத் தூண்டி அதனை வளர்ப்பதற்கேற்றவாறு கற்பிக்கலாம். தொடக்க ஆண்டுகளில் களிமண் வேலை, ஓவியம் வரைதல், தாள்வெட்டுதல், படங்களுக்கு வண்ணம் தீட்டுதல் போன்ற வேலைகளை மேற்கொள்ளலாம். மொழிப்பாடத்தில் கதைகேட்பதும், கதைசொல்லுவதும் கற்பனைக்குச் சிறந்த துணையாம். சில கதைகளை நாடகமாகவும் நடிக்கச் செய்யலாம். வரலாறு, புவியியல்[1] போன்ற பாடங்களைப் பயிற்றும்பொழுது படங்களாலும் சிறு விவரங்களை யெல்லாம் வருணிப்பதாலும் சிறுவர்கள் தொலைவிலுள்ள இடங்களையும் கடந்த காலங்களையும் கற்பனையால் காண்பர். ஆனால், ஆசிரியர் மனப்போக்குதான் இதைச் சரியாக அறுதியிடும் கூறாகும்.

(3) சற்று வளர்ந்த சிறுவர்களுக்குக் கற்பிக்கப்பெறும் இலக்கியம், கவிதை போன்ற பாடங்களால் கற்பனையும் பாநலம் வியத்தலும் வளர்கின்றன. ஆசிரியர்கள் வெறும் சொற்களுக்குப் பொருள் கூறி பாட்டைச் சிதைக்காமல், அதனைச் சுவைப்பதில் பயிற்சி தருதல் வேண்டும். அறிவியலைக் கற்பதாலும் கற்பனை வளர்கின்றது. பொருள்களை ஆராய்தல், உற்றுநோக்குதல், கருதுகோள்களை[2] ஆக்குதல், முடிவுகளைச் சோதித்தல் போன்றவை கற்பனைச் செயல்களில் பயிற்சி தருபவை.

(4) படைப்புக் கற்பனையை மக்கள் பெரிதும் போற்று இன்றனர். பள்ளியிலும் குழந்தையின் படைப்புச் செயல்கள்


  1. 64. புவியியல்-Geography.
  2. 65.கருதுகோள்-Hypothesis.