பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள்

263


மீண்டும் முதலிலிருந்து தொடங்க வேண்டியதில்லை. முதலில் ஒரு கருத்தை உணர்வதும் அதனுடன் ஒரு குறியீட்டை ஒட்டுவதும் பெரிய சிந்தனைச் செயல்களாகும். ஆனால், இச்செயலை இயற்றிக் குறியீட்டிற்குப் பொருள் அளித்தபின் இச்சிந்தனையை மீட்டும் இயற்ற வேண்டியதில்லை. ஒரு குறியீடு எதனைக் குறிக்கின்றது என்று கருதி நேரம் கழிக்காமல் அக்குறியீட்டைப் பயன்படுத்துகின்றோம். கணிதம் ஓர் உயர்ந்த குறியீட்டு மொழி வகையாகும்; ஆனால், அஃது உண்மையில் மற்றெல்லா மொழிகளைப் போன்றதுதான்.

மொழியும் சிந்தனையும். சிந்தனைக்கு மொழி பெருந்துணை புரிகின்றது. மொழியிலுள்ள சொற்கள் யாவும் குறியீடுகளே; அச்சொற்களுக்குப் பொருள் உண்டு. அச்சொற்களை வாய் மொழியாகக் கூறலாம்; எழுதலாம்; செவிட்டு-ஊமையர் படிக்கும் குறியீடுகளிலும் அமைக்கலாம். மொழி நினைவு கூர்தலை[1] எளிதாக்குவதால் அது சிந்தனைக்குரிய செய்திகளைத் திரட்டுவதில் துணைபுரிகின்றது. சொற்களால் அமைக்கப்பெற்ற உண்மைகளையும் விதிகளையும் நினைவிலிருத்துவது எளிது. மேலும், சமூக நிகழ்ச்சிகளால்தான் சிந்தனை பெரும்பாலும் வளர்கின்றது. எடுத்துக்காட்டாக ஒரு குழந்தைக்கு விடுக்கப்பெறும் வினா அதனைச் சிந்திக்கத் துரண்டுகின்றது. அது, தான் கண்டதையும் தனக்கு வேண்டியதையும் உரைக்கும்பொழுது சிந்தனை செயற்படுகின்றது. கலந்தாய்தலும், வாதமும் வளர்ந்தவர்களிடம் சிந்தனையைத் துரண்டுகின்றன.

சைகைகளும் ஒவியங்களும்கூட மொழியாகும். ஒவியங்கள் அல்லது சைகைகளின் ஏற்பாட்டை அறிந்தவர்கள் அவற்றைக் கொண்டு எண்ணங்களைத் தெரிவிக்கலாம். [எ-டு] சாரணப் படையினர் கையாளும் சைகைகள்; இருப்பூர்தி நிலையங்களில் கையாளப்பெறும் கைகாட்டிகள், சிவப்பு பச்சைக் கொடிகள், விளக்குகள். அச்சு நூல்களில் அச்சிடப்பெற்றிருக்கும் எழுத்துகள் படிக்கும் திறமையுடையோருக்கெல்லாம் கருத்துகளைத் தெரிவிக்கின்றன.

ஆதிகாலத்தில் மொழி வளர்ந்த வளர்ச்சிப்படிகளை மொழி வரலாறு எடுத்துரைக்கின்றது. அந்த வளர்ச்சிப்படிகளைக் குழந்தையின் மொழி வளர்ச்சியிலும் நாம் காண்கின்றோம். சிறுவன் முதலில் சொற்களைக் கற்கின்றான்; பிறகு சொற்றொடர்களைக் கற்கின்றான்; அதன் பிறகு அவற்றை எழுத்துகளால் குறிக்கக் கற்கின்றான்.-


  1. நினைவுகூர்-Recall.