பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

கல்வி உளவியல் கோட்பாடுகள்


"இரண்டாம் உலகப் பெரும்போர்" என்பதைப்பற்றி நாம் சிந்திப்பதாக வைத்துக்கொள்வோம். இங்ஙனம் எண்ணுங்கால் பெரும்பாலும் சொற்களையே கையாளுகின்றோம். விமானம், அணுகுண்டு, குண்டுவீச்சு, கடும்போர், ஹிரோஷிமா, நாகசாகி போன்றவற்றின் படிமங்களையும் சிந்தனையில் பயன்படுத்துகின்றோம். ஆகவே, சிந்தனையும் மொழியும் நெருங்கிய தொடர்புடையவை. எண்ணங்கள் வளர வளர மொழியும் வளர்ச்சி பெறுகின்றது. புதிய புதிய சொற்கள் ஏற்படுகின்றன. மேல்நாட்டு அறிவியல்களைத் தமிழில் எழுதுவதனால் தமிழில் புதிய ஆக்கச் சொற்கள் ஏற்படுகின்றன. தமிழ்மொழி 'சொல்லும் திறமையைப்' பெறுகின்றது. எனவே, மொழியைக் கொண்டே பெரும்பாலும் சிந்தனை நடைபெறுகின்றது; சொற்கள் சிந்தனையின் கருவிகளாகத் துணைபுரிகின்றன. அவை முதியோரின் சிக்கலான சிந்தனைகளுக்கும் வெற்றுக் கருத்துகளுக்கும் மிகுதியாகப் பயன்படுகின்றன.

சிந்தனையைத் துண்டும் நிலைகள்: பெரும்பாலும் இவை தனியாளின் சூழ்நிலையையோ அல்லது ஆளுமையையோ பொறுத்தவை. முதலாவது: சிலவகை நிலைமைகள் சிந்தனை யைத் தூண்டும். நம் கண்ணுக்கு முன்னர் விரைவாகவும் பெருவிளைவு பயக்க வல்லனவுமான மாற்றங்களில் சிந்தனை தவிர்க்க முடியாத தேவையாகின்றது. சிந்தனையால்தான் பல அரசியல் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க முடிகின்றது. பள்ளி ஆசிரியர் ஒழுங்குமுறை, விழாக்கள், ஆட்டப் போட்டிகள், பிற அமைப்புகள் ஆகியவற்றில் அதிகமாகத் துணைசெய்து பெரும்பாலானவற்றை மாணாக்கர் முடிவுக்கே விடுத்து அவர் களிடம் தன்னம்பிக்கையை வளர்க்கவேண்டும்.

இரண்டாவது: பலவேறுபட்ட கருத்துகள், பழக்கங்கள், நம்பிக்கைகள், பண்பாடுகள் ஆகியவற்றையுடைய மக்களுடன் நெருங்கிப் பழகுவதால் சிந்தனை தூண்டப்பெறுகின்றது. வானொலி, செய்தித்தாள்கள், பயண நூல்கள் ஆகியவை பள்ளி வாழ்க்கையில் முதலிடம் பெறல்வேண்டும். அடிக்கடி மாணாக்கர்களை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

மூன்றாவது: எண்ண வளர்ச்சியில் மொழி முக்கிய பங்கு பெறுகின்றது. 'சொல் கருத்தின் ஒருவகைக் கைப்பிடிபோலாகின்றது' என்று ஓர் அறிஞர் கூறுகின்றார். மொழி எங்ஙனம் சிந்தனைக்குத் துணைபுரிகின்றது என்பதை மேலே விளக்கினோம்.

சிந்தனையின் படிகள்: சிந்தனைச் செயலில் ஐந்து படிகள் உள. அவை: