பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

கல்வி உளவியல் கோட்பாடுகள்



பெற்ற உண்மைகளுடன் முரண்படாதிருத்தல்வேண்டும். சிறுவர்கட்கு இந்நிலை தொல்லை தருவதாக இருக்கும். அவர்கள். அம்முடிவுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று. விழைவர். ஆசிரியர்கள் அவர்களை எச்சரிக்கையுடன் சொல்லப் பயிற்றவேண்டும்.

ஆய்தல்84 என்பது வாதம்85, செய்துகாட்டல்,86 மெய்ப்பித்தல்87 ஆகியவற்றில் பயன்படும் ஒருமனச் செயல்; அது குறியீட்டு நிலையில் ஒரு பிரச்சினையைத் தீர்ப்பது. பிரச்சினை இல்லாவிட்டால் ஆய்தல் ஏற்படாது. முன் அநுபவத்திலில்லாத ஒரு செயல் நேரிட்டால்தான் மனிதன் காரணங்காட்ட முயலுகின்றான். அல்லது ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே முன் அநுபவங்கள் திரும்பவும் அல்லது புதிதாக அமைக்கப் பெற்று ஆய்தல் நடைபெறுகின்றது.

ஆய்தலின் புதிதான கூறு தெரிந்த அநுபவங்களிலிருந்து ஒரு முடிவினை அடைதல். இதனை உய்த்துணர்தல்87 என்று வழங்குவர். எனவே, உய்த்துணர்வு என்பது பிற அறிவிலிருந்து பகுத்தறியப்பெற்ற ஒரு புதிய அறிவு. தெரிந்த அநுபவங்கள் புலன்காட்சியாலும் ஏற்படலாம்; அல்லது அவை குறியீட்டு வடிவில் நினைவு கூர்தலாலும் ஏற்படலாம். ஆனால், உய்த்துணர்வு எப்பொழுதும் குறியீட்டு வடிவிலேயே இருக்கும். நாம் அறையில் ஏதோ ஒரு வேலையில் அதிகநேரம் ஈடுபட்டு விட்டு சாளரத்தின் வழியாக வெளியே எட்டிப் பார்க்கின்றோம். வாசலிலுள்ள பரவிய பாதையில் குழிகுழியாக நீர் இருப்பதைக் காண்கின்றோம். வானமும் மப்பாக உள்ளது. நாம் மழை வீழ்ந்ததைப் பார்க்காவிடினும் அல்லது கேட்காவிடினும் நாம் நிச்சயம் மழை பெய்திருக்கவேண்டும் என ஊகிக்கின்றோம். தெருவில் மணியோசை கேட்டவண்ணமுள்ளது. மரங்களின் மீது புகை மெல்லிய அருவிபோல் எழுகின்றது. இவற்றிலிருந்து எங்கோ தீப்பற்றியுள்ளது என்றும், அவ்விடத்தை நோக்கித் தீயணைக்கும் படையினர் விரைகின்றனர் என்றும் நாம் முடிவுக்கு வருகின்றோம்.


84. ஆய்தல் - Reasoning.

85. வாதம் -Argument.

86. செய்து காட்டல் - Demonstration.

87. மெய்ப்பித்தல் - Proof.

88. உய்த்துணர்தல் - inference.

89. நினைவுகூர் - Recall