பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276

கல்வி உளவியல் கோட்பாடுகள்



குறிப்பிடத்தக்கதாக இராவிடினும் காலச் செலவினால் உண்டாவது. இரண்டு. சுறுசுறுப்பான மறதி: துன்ப உணர்ச்சிகளைத் தரக்கூடிய கருத்துகளை நம் மனத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று கனவு நிலையிலோ அல்லது நனவிலி நிலையிலோ விரும்புவதால் ஏற்படுவது. இரண்டாவதற்கு எடுத்துக்காட்டுகள்: விரும்பத்தகாத சமூகச் செயலில் நம்மை உட்படுத்தும் கடிதத்தை அஞ்சலில் சேர்க்க மறத்தல், சில உதவிகள் செய்ததற்காக அளவிற்கு அதிகப் பணம் கொடுக்க நேரிடுகிறதே என்ற உணர்ச்சியால் வங்கிச் செக்கில் கையெழுத்திட மறத்தல் போன்றவை.

மன நிகழ்ச்சிகள் மனத்தில் பதிவுகள் ஏற்படுத்தினாலும். காலச் செலவினாலும், வேறு கவர்ச்சியினாலும் மறதி உண்டாகின்றது. கவர்ச்சியற்ற செய்திகள், அளவுக்கு மீறிக் கற்றல், அதிர்ச்சி மறவி[1],குடி முதலியவை மறத்தலுக்கு ஏதுக்களாகும்.

கற்றவுடன் மறதியின் அளவு அதிகமாகின்றது; முக்கியமாக வேறு வேலையை ஏற்றுக்கொண்டாலும் மறதி அதிகம். ஆனால், கொஞ்சம் இடைநேரம் இருந்தாலும் தூக்கத்தில் ஆழ்ந்தாலும் அவ்வளவு மறக்கிறதில்லை. காலையில் கற்றதை மாலையில் நினைவூட்டுவதைவிட இரவில் கற்றதை மறுநாள் சொல்லுவது எளிது. கற்றவுடன் ஒவ்வொரு பாடமுடிவிலும் பாடத்தின் சுருக்கத்தைத் தெளிவாக எழுதினால் சிறுவர் மனத்தில் அது நன்கு பதியும்; படித்தவற்றை அடிக்கடி நினைந்து பார்த்தல் மறதியைத் தடுக்கும்.

மறதி ஒரு விதத்தில் நமது நற்பேறே; முன்னேற்றத்திற்கு மறதியும் இன்றியமையாதது. துன்ப அநுபவங்களை மறத்தலால் நாம் பயன் பெறுகின்றோம். முக்கியமற்ற அல்லது பொருத்த மற்ற விவரங்களை மறப்பதனால், முக்கியமான செய்திகளில் நன்கு கவனம் செலுத்தமுடிகின்றது.

சிறுவர்கட்குச் சிறந்த நினைவாற்றல் உண்டென்று சொல்லுவர். அக்கொள்கை முற்றிலும் சரியன்று. சிறுவர்களிடம் சிந்தனை, ஆய்தல் போன்றவை சிறந்தனவாகத் தோன்றாக் காரணத்தாலும், நினைவு ஒன்றே அவர்களிடம் அதிகமாக நிலவுவதாலும், இவ்வெண்ணத்திற்கு இடம் ஏற்பட்டு அது நம்மிடம் நிலவுகின்றது.


  1. 122. அதிர்ச்சி மறவி-Shock amnesia.