பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள்

279


புதிதாகப் பார்க்கும் பிராணி யொன்றினைக் 'குதிரை' என்று உணர்கின்றோம். 'எண் உணர்வினைக்' கொண்டு இதைப் பின்னும் விளக்குவோம். ஒரு குழந்தை தன் இரண்டாம் வயதில் முழுதுமொத்த (identical) இரண்டு பால் பெட்டிகளைச் சேர்ந்தாற்போல் பார்க்கும்பொழுது அவற்றில் தன் கவனம் ஈர்க்கப்பெறுகின்றது. இதற்கு முன்பு அக்குழந்தை ஒரே பெட்டியைத்தான் பார்த்திருந்தது. இரண்டு பெட்டிகளின் காட்சி அதற்கு ஒரு புதிய அதுபவம். "இரண்டு பெட்டிகள்" என்று அவற்றை அறிந்ததிலிருந்து குழந்தை ஒரே மாதிரியான இரண்டு பொருள்களைக் காண்பதில் விருப்பங் கொள்ளுகின்றது. இரண்டு கத்திகள், இரண்டு தட்டுகள், இரண்டு சிறு வண்டிகள் ஆகியவற்றைக் காணும்பொழுது மகிழ்ச்சி கொள்ளுகின்றது. அதற்கு அடுத்த நிலை இரண்டு ஒப்புமையான (Similar) பொருள்களைக் காணுதல்; ஒரு தேக்கரண்டி, ஒரு மேசைக் கரண்டி ஒரு பூவன் பழம், ஒரு மலைப்பழம் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம். இதற்கும் அடுத்தநிலை வேறுபாடான (Dissimilar) பொருள்களைக் காணுதல்; ஒரு பேனாவும் ஒரு பென்சிலும், ஒரு பம்பரமும் ஓர் ஊதுகுழலும் ஆகியவை இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாகும். இவ்வாறு பல்வேறு விதமாகத் திரும்பத் திரும்பக் கூறுவதில் "இரண்டாம்தன்மை" (Two-ness) பற்றிய எண்ணம் மெதுவாகத் தலை காட்டுகின்றது. வரவரப் பொருள்களின் இயைபுகள் மறைந்து குழந்தை இரண்டு என்ற சொல்லை ஆளத்தொடங்குகின்றது; பிறகு '2' என்ற குறியீடு இதன் இடத்தைப் பெறுகின்றது. குழந்தையின் 'இரண்டு' என்பதுபற்றிய எண்ணம் 6-4=2; ½x4=2; ¼x8=2 என்பன போன்ற கணக்கிடும் அநுபவங்களால் பின்னும் வலியுறுகின்றது. இது வெற்றுணர்வு.

ஒற்றுமை வேற்றுமைகளை உற்று நோக்கி ஒப்பிட்டுப் பார்த்து உணர்வதால் பொது உணர்வு உண்டாகின்றது. குழந்தைக்குத் தொடக்கத்தில் கிடைக்கும் பொது உணர்வு 'தின்பண்டம்' ஆகும். குழந்தை பேசும் ஆற்றல் கைவரப் பெறுவதற்கு முன்னரே ரொட்டி, வாழைப்பழம், மிட்டாய் முதலியவற்றைக் கண்டால் கைகளை நீட்டுகின்றது. இதிலிருந்து பொருள்களை நிதானித்து அறியும் ஆற்றல் அதற்கு வந்து விட்டது என்று கொள்ளலாம். 'இது தின்பண்டம்’ என்பது ஒரு துணிவு[1] ஆகும். விரைவில் குழந்தை படுக்கை, கரண்டி, தட்டு, பால், சருக்கரை போன்ற பல பொதுவான எண்ணங்களையும் பெற்றுவிடுகின்றது. இம் மாதிரியான பொது


  1. துணிவு-Judgement.