பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288

கல்வி உளவியல் கோட்பாடுகள்


கல்வி ஏற்பாட்டிலுள்ள[1] பல பாடங்கள் இதற்குப் பல வாய்ப்புகளை நல்குகின்றன. சரியான முறையில் மட்டிலும் பயிற்றினால் இலக்கியத்தைப்போல் இதற்குத் துணை செய்யக் கூடிய பாடமே இல்லை யெனலாம். புவியியல்[2], கணிதம், அறிவியல் பாடங்களில்கூட வெறும் செய்திகளையும் விதிகளையும் கற்பிப்பதுடன், மாணாக்கர்களைப் பிறருடைய வாழ்க்கையுடன் கற்பனையில் ஒன்றும் முறையை வளர்க்கலாம். வெளிநாட்டார்கள், அறிவியலாராய்ச்சி வல்லுநர்கள், பல்வேறு விதங்களில் மக்கள் நலனுக்குச் சேவை புரிந்தோர் இவர்கள் வாழ்க்கை மாணாக்கர்களின் பரிவு வளர்ச்சிக்குத் துணை புரியலாம். வரலாறு மட்டுமின்றி ஒவ்வொரு பாடத்திலும் மாணாக்கர்கள் தமக்கு முன்னால் வாழ்ந்தவர்கட்கு மிகவும் கடமைப்பட்டவர்கள் என்பதை அவர்கள் உணரச் செய்வது ஆசிரியரின் பொறுப்பாகும்.

பின்பற்றல்

பின்பற்றல்[3] கற்றலில் பெரும்பங்கு பெறுகின்றது. சிறு குழவிகள் மொழி கற்றலிலும் பிற செயல்களிலும், சற்று வளர்ந்த பிள்ளைகள் சமூகப் பழக்கங்களையும் மனப்பான்மை களையும் கற்றலிலும் பின்பற்றல் உணர்ச்சி தலையாய பங்கி னைப் பெறுகின்றது. எனவே, ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணாக்கர்கட்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக, முன் மாதிரி களாகத் திகழவேண்டும். சிறந்த எடுத்துக்காட்டுகளை அவர்கள் முன் வைக்கவேண்டும். அறநிலைக் கருத்துகளைச் சிறுவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடமிருந்தே பெறுகின்றனர். மதிப்புணர்ச்சி, சுயநலமின்மை, சேவையுணர்ச்சி, உண்மையொழுக்கம் முதலியவை சிறுவர்களிடம் வளர வேண்டு மானால் முதலில் நம்மிடம் அவை இருத்தல் வேண்டும். நாம் சொல்லுவதைப்போல் செய்யவேண்டும் என்று குழந்தைகளை எதிர்பார்த்தலால் பயனில்லை; முதலில் நாம் அவற்றில் நடந்து காட்டவேண்டும்.

சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். [4]

என்ற குறளின் பொருளைச் சிறுவர்கள் பிறர் சொல்லாமலேயே நன்கு உணர்வர்.


  1. கல்வி ஏற்பாடு-Curriculum.
  2. புவியியல்--Geography.
  3. பின்பற்றல்-Imitation.
  4. குறள்.664.