பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள்

289


மனிதர்கள் கற்றலில் பின்பற்றல் தொட்டிலிலிருந்து சுடுகாடு மட்டும் பங்குபெற்ற வண்ணமுள்ளது. தங்கட்குத் திருப்தி கிடைக்கும்போதெல்லாம் மக்களிடம் பின்பற்றல் நிகழ்கின்றது. பலர் நிகழ்த்தும் பலவிதமான செயல்களைக் கற்கவேண்டு மாயின் நாம் முன்பு பழகியுள்ள திறன்களைத் தக்க முறையில் பயன்படுத்த வேண்டும். பள்ளிகளில் சிறந்த முன்மாதிரிகள் மாணாக்கர்கள்முன் வைக்கப்பெறுதல் வேண்டும். பேரறிஞர் களின் வாழ்க்கை வரலாறுகள் இதற்குப் பெருந்துணை புரியும். "மிகப் பெரிய புதுப்போக்குடைய"[1] அறிஞர்கள்கூட தமக்கு முன்னிருந்த பெரியோர்களைப் பின்பற்றியே அறிஞர்களாயினர் என்பதை மாணாக்கர்கள் உணரச் செய்தல் வேண்டும். பேரறிஞர் ஐன்ஸ்டைனும் நியூட்டனின் கருத்துகளைப் பின் பற்றியே தன்னுடைய ஒப்புநோக்குக் கொள்கையை வளர்த்தார்; கலிலியோவைப் பின்பற்றியே நியூட்டன் அறிவு வளர்ச்சி யினைப் பெற்றார். தன்-வெளியீட்டிற்குப்[2] பின்பற்றல் ஒன்று தான் சிறந்த வழியாகும். இதனை ஆசிரியர்கள் மாணாக்கர்களிடம் தக்க முறையில் வளர்த்தல் அவர்களின் கற்றலுக்குப் பெருந்துணை புரிவதாகும்.

கருத்தேற்றம்

உணர்ச்சியை மிகுதியாகத் துண்டுவதன் காரணமாகச் சிந்தித்துப் பார்க்காமலேயே பிறர் கூறும் செய்திகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் நிலையைக் கருத்தேற்றம்[3] என வழங்குவர். எவ்வளவுக்கெவ்வளவு பிறர் கூறும் யோசனைகளை ஒருவன் ஒப்புக்கொள்ளுகின்றானோ அவ்வளவுக்கவ்வளவு கருத்தேற்றம் நடைமுறைக்கு வருகின்றது. ஆய்தல் திறன் அற்றிருக்கும் பொழுதே, இங்கனம் ஒப்புக்கொள்ளுதல் நிகழ்கின்றது. (எ.டு) களைப்புடனிருக்கும்பொழுது இஃது ஏற்படுகின்றது.

இஃது எளிதில் ஏற்படுவதற்குச் சில தத்துவங்கள் உள. அவை: (i) இஃது அறிவைக் கிளறாமல் உணர்ச்சியைக் கிளறுதல்; (ii) இதை ஆராயாமலேயே மனம் ஏற்றுக் கொள்ளுதல்; (iii) திரும்பத்திரும்ப ஏற்படுதல் என்பவை. எனவே, கருத் தேற்றத்தின் ஆற்றல் நனவிலி உளத்தையே பொறுத்தது; அறிவைப் பொறுத்ததன்று. இத்தகைய தூண்டல் எப்பொழுதும் ஒரே ஆற்றலுடையதாக இராது. தூண்டல் ஏற்கும். சமயத்தையும் தூண்டப்பெறுபவர் உளநிலையையும் பொறுத்து


  1. புதுப்போக்கு-0riginal
  2. தன்-வெளியீடு-Self-expression
  3. கருத்தேற்றம்-Suggestion

க.உ, கோ. . 19