பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

கல்வி உளவியல் கோட்பாடுகள்


சூழ்நிலைக்கேற்றவாறு ஓர் உயிரி தன்னைத் தக அமைத்துக் கொள்ளும் திறமையை உயிரியலார் அறிதிறன்[1] எனக் குறிப்பிடுவர். மனிதனைத் தவிர மற்ற விலங்குகளில் இத்தகைய அறிதிறன் வளர்ச்சியை வாவில்லாக் குரங்குகளிடம் மிகுதியாகக் காண்கின்றோம்.

அறிதிறனுக்கு உயிரியலில் வழங்கும் வரையறை உளவியலுக்குப் போதுமானதன்று. மனித உள்ளத்தை ஆராய்கையில் இவ்வளவு தூலமான வரையறை அதிகப் பயன்தராது. உளவியலார் பலரும் அறிதிறனைப் பலவாறு வரையறுத்துள்ளனர். அறிவுடைமை[2] வேறு; அறிதிறன் வேறு. அறிதிறன் என்பது சூழ்நிலையைத் தனக்கேற்பப் பயன்படுத்திக் கொள்ளும் ஒருவித ஆற்றல். ஒரு புதிய நிலையைத் தக்கவாறு சமாளிக்க வல்ல திறமையே அறிதிறன் என்பர் ஒரு சாரார். மற்றொரு சாரார் கணக்கு போன்ற வெற்றுநிலைப் பொருள்களைச் சிந்தனை செய்யும் திறமையே அறிதிறன் என்பர். அறிவுத் துலங்கலின் வேகமும் வெற்றியுமே அறிதிறன் என்பர் பிறிதொரு சாரார். பினே[3] என்பார் அறிதிறன் என்பதில் உட்கோள், ஆக்கத்திறன், விடாமுயற்சி, ஆராய்ந்து பகுத்தல் ஆகியவை அடங்கும் என்று கூறுவர்.

அறிதிறன் நிலைகள்

அறிவுச் செயல்களில் மக்களிடையே வேற்றுமை காணப்படுகின்றது என்பது நீண்டகாலமாக அறியப்பெற்ற செய்தி. இங்ஙனமே தனியாளிடம் காணப்பெறும் வேற்றுமைகளைப் பற்றி நவீன உளவியல் நன்கு வரையறுத்து எடுத்தியம்புகின்றது. மிக உயர்ந்த அறிதிறன் வாய்ந்த மக்கள் மேதைகள் என்றும், மிகக் குறைந்த அறிதிறன் உடையோர் மந்தமான அறிவுடையோர் என்றும் வழங்கப் பெறுகின்றனர். இவ்வாறு மாணப் பெருகிய அறிதிறனைக்கொண்டவரும், கழியக்குறுகிய அறி திறனையுடையவரும் மிகச் சிலரே. பெரும்பாலான மக்கள் சராசரியை யொட்டிய் திறன் படைத்தவர்கள். கீழே அறிதிறன் ஈவினை விளங்குங்கால் இந்நிலைகளைப் பின்னும் தொடர்பு காட்டி விளக்குவோம்.

அறிதிறன் ஆய்வுகளின் வளர்ச்சி

பண்டிருந்தே மக்கள் ஒருவருக்கொருவர் அறிதிறனை மதிப்பிட்டே வந்துள்ளனர். எடுத்துக்காட்டாக, குக்கிராமத்தில்


  1. அறிதிறன்-Intelligence.
  2. அறிவுடைமை-Knowledge or intellect
  3. பினே-Binet.