பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312

கல்வி உளவியல் கோட்பாடுகள்



கூறினை அளந்து ஒரு வரைபடம் இயற்றினால் அதில் இரு ஏற்றங்கள் காணப்பெறல் வேண்டும். இத்தகைய ஏற்றம் ஒரு மதிப்பெண் பெறும் மக்களிட்டத்தைக் காட்டுகின்றது. வரை படத்தின் இரண்டு பக்கங்களில் இரு ஏற்றங்கள் காணப் பெற்றால் ஒரு தன்மையை இரண்டு தொகுதியாக அல்லது வகையாகக் காணலாம். ஆனால், உண்மையில் நாம் காண்பது ஒரு வளைகோடு; மணிசாடி உருவத்தைப் போன்றது; நடுவில் ஒரே ஏற்றமும் இரு பக்கங்களிலும் தாழ்வுமானது. இதிலிருந்து நாம் பெறும் முடிவு என்ன? பெரும்பாலான மக்கள் சமநிலை அல்லது சராசரி நிலையிலும் மிகக் குறைந்த எண்ணிக்கை யுள்ளவர்களே அகநிலை, புறநிலை உடையவர்கள் என்பதை யும் அறிகின்றோம்.

  ஒரு தனியாள் பண்புக்கூறுகளின் பரவல்': மக்களை ஒருவரோடொருவர் ஒப்பிடுங்கால் தொகுதியோ வகையோ காணப்பெறுவதில்லை என்பதை மேலே கண்டோம். இனி, ஒரே தனியாளின் பண்புக் கூறுகள் எவ்வாறு பரவியுள்ளன என்பதைச் சிறிது ஆராய்வோம். ஒரு தனியாளின் எல்லாத் திறன்களும் ஒரே அளவினவா? சராசரி மனிதன் எல்லாப் பண்புகளிலும் சராசரியானவனா? ஒரு மனிதனின் அளக்கக் கூடிய அல்லது மதிப்பிடக்கூடிய எல்லாப் பண்புக் கூறுகளையும் அளந்தால் அவை யாவும் ஒரே நிலையில், அளவில் இல்லா திருப்பது தெரியும். பெரும்பான்மையானவை சராசரி நிலையை ஒட்டியிருக்கும். சில சராசரி நிலையினின்றும் மிக உயர்ந்தவை யாகவும், வேறு சில தாழ்ந்தவையாகவும் அமைந்திருக்கும். அஃதாவது, ஒவ்வொரு தனியாளிடமும் ஆற்றல்கள், திறன்கள் ஆகியவற்றில் வேறுபாடு உள்ளது. இந்த அளவுகளையும் வரை படத்தில் அமைத்தால் மேற்குறிப்பிட்ட வரைபடம் போலவே அமையும். இதிலிருந்து வாழ்க்கையில் ஓர் உண்மையை அறியலாம். ஒரு செயலில் பெருவெற்றியை அடைந்தவர் எல்லாச் செயல்களிலும் அதே அளவு வெற்றி பெறுதல் இயலாதது. அங்கனமே தப்பான வேலையைத் தேர்ந்து அதில் .தவறிய ஒருவர் வேறொரு வேலையில் சிறப்படையலாம்.
  பண்புக்கூறுகளின் இணைப்பு: ஒரு தனியாள் எல்லாத் திறன்களிலும் ஒரே அளவு உயர்வுடையவன் அல்லன் என்று மேலே கண்டோம். ஆயின், இத்திறன்கள் எந்த அளவுக்கு ஒன்றோடொன்று தொடர்புடையவை: பல திறன்களின் ஒப்புத்

33. ward-to-Graph. 34. பண்புக் கூறுகள்.Traits. 35. Lorado-Distribution.