பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

கல்வி உளவியல் கோட்பாடுகள்


இக்காலப் பிரச்சினைகளுள் பெரியதொன்றாகும். இன்றைய நிலையில் அநுபவ முறையில் ஏதோ செயல்கள் நடைபெற்றுத்தான் வருகின்றன; அரசினர் இதில் தனிக்கவனமும் செலுத்துகின்றனர். எனினும், இவை அறிவியல் அடிப்படையில் உளவியல் முறைப்படி நடைபெறுகின்றன என்று திட்டமாக உரைத்தற்கில்லை.

அறிதிறனுக்கும் கற்கும் திறனுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி கொள்ளப் பெற்ற பல ஆராய்ச்சிகளிலிருந்து அறிதிறனுக்கும் கற்கும் திறனுக்கும் கல்வியின் எல்லா நிலைகளிலும் நேர் ஒப்புத் தொடர்பு[1] உள்ளதென்று தெரிகின்றது. எனினும், இவ் ஒப்புத் தொடர்பு தொடக்க நிலைப்பள்ளிகளில் மிக அதிக மாகவும், உயர்நிலைப் பள்ளிகளில் சற்றுக் குறைவாகவும், கல்லூரியில் மிகத் தாழ்வாகவும் உள்ளது. இவ்வேற்றுமைகளுக்குப் பல காரணங்கள் உள்ளன.

(1) தொடக்கநிலைப் பள்ளிகளின் குழந்தைகளுள் தனி வேற்றுமையின் முழுப் பரப்பும் காணப்பெறுகின்றது. குழந்தைகள் வளர வளர அவர்கள் பல்வகைத் தேர்தலுக்குட்படுதலால் மந்தநிலை மாணாக்கர்கள் பள்ளியை விட்டு நீங்கி விடுகின்றனர். ஆகையால், மேல் வகுப்புகளில் அறிதிறன் வேறுபாடு குறைவு. அதனால் அறிதிறனும் வகுப்பு உயர்வும் ஒன்றாய் மாறும் வாய்ப்பு குறைகின்றது. அதனால் அவற்றின் ஒப்புத்தொடர்பெண்ணும் குறைவு.

(2) கல்வி உயர உயர, தனித்துறைகள் பெருகுகின்றன. எனவே, வெற்றி பெரும்பாலும் தனித்திறன்களாலும் சிறுபான்மை பொது அறிதிறனாலும் ஏற்படுகின்றது.

(3) கீழ் வகுப்புகளில் எல்லா மாணாக்கர்களுக்கும் வேலை நேரம் ஏறக்குறைய சமம். மேல் வகுப்புகளில் ஒரு மாணாக்கன் இதனைத் தன் விருப்பப்படி மாற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. ஆகையால், அவன் அதிக நேரம் செலவழித்துக் குறைந்த திறனை அடையலாம்.

எனினும், அறிதிறன் வேறுபாட்டால் கற்றல் திறன் வேறுபடுகின்றதென்றும், தேர்வுகள் இதனையொட்டி நடைபெற வேண்டும் என்றும் நாம் அறிகின்றோம்.

தனி வேற்றுமைக்கேற்ப முறைகளை அமைத்தல்: மாணாக்கர்கள் கற்கும் திறனில் வேறுபடுவது பள்ளிகளுக்கு ஒரு முக்கிய பிரச்சினையாகும். முற்பாடான மாணாக்கர்களுக்கு ஊக்கம் தரும்


  1. ஒப்புத் தொடர்பு-Correlation.