பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறிதிறனும் தனியாள் வேற்றுமைகளும்

315

செய்திகளோ வேலைகளோ வகுப்புப் போதனையில் கிடைப்பதில்லை. அவர்கள் பொதுவாகக் கற்பிக்கப்பெறும் பாடங்களில் அக்கறை கொள்ளாது ஊக்கங் குன்றிச் சிறு குறும்புகள் செய்யத் தொடங்குவர். பிற்பாடான மாணாக்கர்களுக்குப் பொதுவாகக் கற்பிக்கப்பெறும் செய்திகளை புரிந்துகொள்ள முடிவதில்லை. அவர்கள் தன்னம்பிக்கை குன்றி மனத்தளர்ச்சி அடைவர்: நாணமும் பெறுவர்; கற்கும் முயற்சியையும் கைவிடுவர். இந்தத் தனி வேற்றுமைப் பிரச்சினையைத் தீர்க்க இரண்டு விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பெறுகின்றன. ஒன்று: திறமையை அடிப்படையாகக் கொண்டு மாணாக்கர்களைப் பிரிவினை செய்தல்; இரண்டு: செயலை அடிப்படையாகக் கொண்டு வேலைகளை அமைத்தல்.

முதல் முயற்சி: பல பள்ளிகளில் மனவயதைக் கொண்டு மாணாக்கர்களைப் பிரிக்கின்றனர். ஒரு போதனை வகுப்பில் ஏறக்குறைய ஒரே மன வயதுள்ள மாணாக்கர்கள் அமைகின்றனர். இதனால் மாணாக்கர்களின் மனத்திறன்களுக்கேற்ப ஆசிரியர் கற்பிக்கும் முறைகளை மேற்கொள்ள முடிகின்றது. இம்முறையில் நிறைமதியுள்ளவர்கள் பாடம் எளிதென எண்ணி சலிப்படைய மாட்டார்கள். குறைமதியுடையோரும் பாடம் கடினம் என எண்ணி விட்டு விடும் வாய்ப்புகள் இல்லை. மன வயது ஒற்றுமை, கற்றல் திறனில் ஒற்றுமையை அளிக்கிறதென்பது கட்டுப்படுத்திய சோதனை யொன்றாலும் அறிகின்றோம்.

ஆனால், மணவயதை அடிப்படையாகக் கொண்டு ஏற்ப்ட்ட பிரிவுகளை அடிக்கடி திருத்தி அமைக்க வேண்டும். காரணம், கால வயதில் வேறுபட்டு மனவயதில் ஒன்றுபட்டுள்ளவர்கள் ஒரேகால இடையீட்டில் வெவ்வேறாக வளர்கின்றனர். ஒரு யாண்டிற்குப் பின் இவர்களைச் சோதித்தால் மனவயதிலும் வேறுபடுவது தெரியும். காலம் செல்லச் செல்ல இவ்வேறுபாடு அதிகரிக்கும்.

திறமையை அடிப்படையாகக் கொண்டு மாணாக்கர்களைப் பிரித்தமைப்பதில் வேறு தீங்குகளும் நேரிடுகின்றன. தனி வேற்றுமை அதிகமாயிருப்பதால் அறிதிறன் மிக்க சிறுவன் ஒருவனை மந்த நிலையிலுள்ள பெரியவன் ஒருவனோடு சேர்க்க நேரிடும். இதனால் மனவயது ஒன்றாக இருப்பினும் உடல் நிலை, சமூக வளர்ச்சி, உள்ளக்கிளர்ச்சி, முதிர்ச்சி ஆகியவற்றில் மிகவும் வேறுபட்ட தொகுதிகள் அமைகின்றன. அறிதிறன் வேற்றுமைகளைப் போலவே இவையும் அளவுக்கு