பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் நலமும் உடல்நல வியலும்

319

உடல்நலத்தைப் பற்றிய கல்வியும் பயிற்சியும் தொடக்கத்திலிருந்தே பள்ளியின் அன்றாட வாழ்க்கைப் பகுதியாக அமைதல் வேண்டும். இவ்வாறு அமையின், உடல்நலத்துடன் வாழும் வாழ்வால் தனக்கும், தன் தோழருக்கும், தன் பள்ளிக்கும், தன் வீட்டிற்கும், நன் நாட்டிற்கும் நற்பயன் விளையும் என்ற உண்மையைக் குழந்தை செவ்விதின் அறிய வாய்ப்பு கிடைக்கின்றது.

குழந்தை புலன்களின் மூலமே சூழ்நிலையிலிருந்து அறிவு பெற்று அச்சூழ்நிலைக்குத் தக்கவாறு பொருத்தப்பாடு அடைகின்றது என்பதை முன்னர்க் கூறினோம். அப்புலன்களில் யாதாவது குறைபாடுகளிருப்பினும், அன்றி அவை தக்க முறையில் செயற்படாவிடினும் முற்றிலும் சரியான பொருத்தப்பாடு அடைதல் முடியாது. கடுமையான குறைபாடுகள் இருப்பின், இடர்ப்பாடுகள் அதிகமாகிப் பிறருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புகளே இல்லாது போய்விடும். இதனால் ஆளுமை வளர்ச்சியும் தடைப்பட்டு விடும். எனவே, இப் புலன்களுக்கு நேரிடும் சில குறைபாடுகளையும், அவற்றின் அறிகுறிகளையும் அக் குறைபாடுகள் நேரிடும் காரணத்தையும், குறைபாடுகளைப் போக்கும் முறைகளையும்பற்றி ஆராய்தல் இன்றியமையாதது.

கண்ணின் குறைபாடுகள்: காரணமும் அறிகுறிகளும்

கண்விழி நீக்கத்தால் பார்வையை இழந்து விடுவோம் என்பது நாம் அறிந்ததே. வேறு காரணங்களும் உள. அவை; (1) கண்ணின் வில்லை வீங்குதல் அல்லது கண் திரவங்கள் இறுகுதல்; (2) கட்புலப்படாம் அழிதல்; (3) கண் திரையிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புப் பாதைகள் அழிதல்; (4) மூளையின் பார்வை மையங்கள் அழிதல். இவ்வழிவுகளுக்குக் காரணங்கள் பல. புண்படுதல், விபத்துகள், நஞ்சு, நோய் ஆகியவை பொதுவாக நிகழும் காரணங்கள். இக்குறை தற்காலிகமானதாகவும் இருக்கலாம்; நிரந்தரமானதாகவும் அமையலாம். நிரந்தரமாக அமைந்து விட்டால் பார்வையை மீண்டும் பெற முடியாது.

ஏற்கனவே இரண்டாம் இயலில் கண்ணின் அமைப்பு, காட்சிப்புலன் செயற்படும் விதம் முதலிய செய்திகளை அறிந்தோம். அன்றியும், சாதாரணமாகக் கண்களில் ஏற்படக்கூடிய கிட்டப்பார்வை, தூரப்பார்வை, குறை காட்சி, இரட்டைப் பார்வை ஆகிய குறைகளையும், அவற்றின் காரணங்களையும்,