பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

320

கல்வி உளவியல் கோட்பாடுகள்


அவற்றைப் போக்கும் முறைகளையும் கண்டோம். ஈண்டுக் கண்ணின் குறைபாடுகளில் மேலும் சிலவற்றைக் காண்போம்.

1. முதிர் காட்சி[1] : இதனை 'வெள்ளெழுத்து' என்றும் வழங்குவர். இது தூரப் பார்வையின் ஒரு வகை. வயது முதிர்ந்தபின் கண்ணிலுள்ள வில்லை இறுகுவதால் இக்குறை தோன்றுகின்றது. தகுந்த குவி வில்லைகளைக் கொண்டு இக் குறையைச் சமாளிக்கலாம்.

2. குழல் பார்வை[2] : ஒவ்வொருவருடைய கண்ணிலும் பார்வை நரம்பு கட்புலப்படாமோடு ஒன்று சேருமிடத்தில் ஒரு குருட்டுப் புள்ளி அமைந்துள்ளது. இஃது எப்போதும் இருந்து வருவதாலும், இதன் துணையின்றியே மற்ற கண் திரைப் பகுதிகள் காட்சித் தொழிலை நன்கு நடத்தி வருவதாலும் நாம் இதனைப்பற்றி அதிகமாக உணர்வதில்லை. ஆனால், மதுபானம், புகையிலையை அதிகமாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றாலும் அதிகமான ஒளியைப் பார்ப்பதாலும் தற்காலிகமானவையும் நிலையானவையுமான பல குருட்டுப் புள்ளிகள் உண்டாகின்றன. இவை பார்வையைப் பெரிதும் பாதிக்கின்றன. குழற் பார்வை சில பொது நோய்களாலும் பார்வை நரம்புப் பாதையின் தடையாலும் நேரிடுகின்றது.

குழற் காட்சியால் காட்சிப் பரப்பு குறைந்து கொண்டே வத்து வெளியுலகம் ஒரு குழல்மூலம் பார்க்கப் பெறுவதுபோல் தோன்றுகின்றது. சூழ்நிலையின் பல பகுதிகளையும் பார்க்க வேண்டுமாயின், நாம் அதிகமான தலையசைவுகளையும் கண்ணசைவுகளையும் இயற்றவேண்டும். இது தொலை நோக்காடியில் ஒருவன் வானத்தை அளக்க அதனைப் பன்முறை திருப்புவது போலாகும். பண்டைக் காலத்தில் இக்குழற் காட்சி ஒரு வகை மனக்கோளாறினால் உண்டாகின்றது என்று கருதினர். இன்று அது பல காரணங்களால் நிகழ்கின்றது என்று கண்டறியப் பெற்றுள்ளது.

காதின் குறைபாடுகள் : காரணமும் அறிகுறிகளும்

காதின் அமைப்பைப்பற்றியும், கேள்விப் புலன் எவ்வாறு செயற்படுகின்றது என்பதையும் முன்னர் கண்டோம். இங்கு காதின் குறைபாடுகளையும், அவற்றின் காரணத்தையும், அவை தோன்றும் அறிகுறிகளையும் சிறிது ஆராய்வோம்.


  1. முதிர் காட்சி-Old sightedness
  2. குழல் பார்வை-Tunnel Vision,