பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் நலமும் உடல்நல வியலும்

349


வரையைக் கொண்ட கொழுப்புகள் சற்றுக் கடினமாகச் செரிக்கக் கூடியவை. வெண்ணெய், மீன்எண்ணெய்போன்ற பிராணிமூலக் கொழுப்புகளில் A, D விட்டமின்களும் அடங்கியுள்ளன. குளிர் நாடுகளில் கொழுப்புகள் சிறந்த உணவாக அமைகின்றன. காரணம், அவற்றிலிருந்து அதிகமான வெப்பம் கிடைப்பதே.

கரிமமிலா உப்புகள்: உணவிலுள்ள உப்பின் மூலங்களுள் முக்கியமானவை சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் அயம், செம்பு, மாங்கனீஸ், குளோரின், அயோடின், ஃபுளோரின், பாஸ்வரம், கந்தகம் ஆகியவைகளே. நமது உடலில் ஏறக்குறைய 31 வகை உப்புகள் எலும்புகளை உரமாக்கிப் பல்லுக்கு உறுதி தந்து, உடலின் பல சாறுகளையும் தத்தம் இயல்பு மாறாமல் இருக்கும்படி காத்துக் கண்காணிக்கின்றன. அப்படிச் செய்வதால் உடலின் உள் சூழ்நிலை காக்கப் பெறுகின்றது. நமது சமையல் முறையில் காய்கறிகளையும் கீரைகளையும் வேக வைத்து நீரை வடிப்பதால் இவ்வுப்புகள் இழக்கப்பெறுகின்றன. நீராவியில் வேகவைத்தால் இவை பாதுகாக்கப்பெறும்.

கால்சியம்: எலும்பிலும் பற்களிலும் உள்ள முக்கியமான பகுதி. அது இதயத் துடிப்பு, குருதி உறைதல், நரம்புத்துரண்டல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்றது. கால்சியக் குறைவால் மிகுதியான நரம்புத்துடிப்பு, குறைந்த தசை இயக்கம் நேரிடுகின்றன; கால்சியக் குறைவு ஆஸ்த்மாவுக்கும் தோல்நோய் களுக்கும் காரணமாகின்றது. பால், பாலாடைக்கட்டி, பச்சைக் காய்கறிகள், ஆரஞ்சு போன்றவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது.

பாஸ்வரம் எலும்புகளுக்கும் குருதி உறையாப் பகுதிக்கும்,[1] நரம்பு மண்டலத்திற்கும் மிகவும் இன்றியமையாதது. பாஸ்வரக் குறைவால் வளர்ச்சித் தடை, சரியான எலும்பின்மை, பற்கள் அழிவு முதலியவை நேரிடுகின்றன. பாலாடைக்கட்டி, முட்டை, கொட்டைகள், கோதுமை, பால் உருளைக்கிழங்கு ஆகிய வற்றில் பாஸ்வரம் உள்ளது.

அயம்[2]: குருதியின் செவ்வணுக்களுக்கு மிகவும் இன்றியமையாதது. ஈரல், முட்டை, கோதுமை, பேரீச்சம்பழம் முதலியவற்றில் அயம் அதிகமாக உள்ளது.


  1. குருதி உறையாப்பகுதிBlood serum.
  2. அயம்-Iron.