பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332

கல்வி உளவியல் கோட்பாடுகள்



பெறுகின்றது. இஃது உணவாலும், உடற்பயிற்சியாலும், காற்றாலும், தூக்கத்தாலும், வேண்டாப் பொருள் அகற்றப் பெறுவதாலும் உண்டாகின்றது. இத் தேய்வு முறையும் புத்தமைப்பு முறையும் இல்லாவிடில், உடல் நலத்தையும் தொழில் இசைவையும் பெற முடியாது.

முதலில் குறிப்பிட்டதேய்வுச் சிதைவு முறையில் சில கழிவுப் பொருள்கள் -முக்கியமாக லாக்டிக அமிலம்[1] - உண்டாகின்றன. இவை நச்சுப்பொருள்கள்[2]. பொதுவாக இவை ஆக்ஸிஜெனாலும் நல்ல குருதியாலும் உடனுக்குடனே நீக்கப் பெறாவிடில் இவை உடலின் பல பகுதிகளுக்கும் சென்று கனைப்பினை விளைவிக்கின்றன. அதாவது, தொழிலும் இயக்கமும் விரைவாக நடைபெறுவதால், தேய்வின்வேகம் புத்தமைப்பை மிஞ்சுகின்றது. இதனால் நச்சுப் பொருள்கள் அதிகமாக ஏற்பட்டு உயிரியின் செயலாற்றல் குறைகின்றது. சிறிது ஓய்வின்றி வன்தொழிலை நீடித்தால் இந்நச்சுப் பொருள்கள் உயிரிமுழுமையும் பரவி முழுக்களைப்பு நிலையை உண்டாக்கிவிடுகின்றது. இந்த உண்மையை அறிஞர்கள் சோதனை வாயிலாக மெய்ப்பித்துள்ளனர். (எ.டு) களைப்படைந்த பிராணியின் குருதியைக் களைப்படையாத பிராணியின் உடலுட் செலுத்தினால் அதுவும் களைப்படைந்து விடுகின்றது.

களைப்புக்கு மற்றொரு காரணம் ஆக்ஸிஜென் குறைவு. குருதியில் செவ்வணுக்கள் எடுத்துச் செல்லும் ஆக்ஸிஜெனின் உதவியாலன்றி ஆற்றல் தரும் சேர்க்கைகளைச் சிதைத்து உடலாற்றல் பெற முடியாது.

மனக் களைப்பு உடற்களைப்போடு நெருங்கிய உறவினைக் கொண்டது. இரண்டுவிதக் களைப்புகளும் ஒன்றையொன்று தூண்டக்கூடிய ஆற்றலையுடையவை. ஒரு தேர்வு அல்லது அதுபோன்ற தொடர்ச்சியான மனவேலைக்குப் பிறகு, ஏதாவது உடல் வேலையை மேற்கொள்வதென்பது சாத்தியப்படுவதில்லை. அங்ஙனமே, நன்றாக விளையாடி உடல் முற்றக் களைத்த பின்னரோ, அலலது கடுமையான ஒரு பயணத்திற்குக் பின்னரோ மனவேலையால் ஒன்றினை ஊன்றிக் கவனிப்பது இயலாததாகும். இதனால்தான் சில உளவியலறிஞர்கள் உடற்களைப்பு, மனக்களைப்பு என்ற பாகுபாட்டை ஒப்புக் கொள்வதில்லை. ஆயினும், சிறிது களைப்பெய்திய ஒருவர்


  1. 50. லாக்டிக் அமிலம் -lactic acid.
  2. 51. நச்சுப் பொருள்.Toxin.