பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல்பு பிறழ்ந்த நடத்தை

343

நாடும் அன்பு, பாதுகாப்பு, விடுதலை, பாராட்டு, தன்மதிப்பு போன்றவை கிண்டக்கின்றன. அவற்றால் அவை பொருத்தப் பாடு அடைகின்றான். பள்ளிக்கு வந்த பிறகும் அதிகமான நேரத்தை வீட்டிலும் சமூகத்திலுமே கழிக்கின்றான். அவனது ஆளுமை வளர்ச்சி தொடர்ச்சியாக ஏற்படும் பொருட்டுப் பள்ளி புகுந்த பின்னரும் அவன் குடும்பமும் சமூகமும் பொருத்தப் பாட்டிற்கு வேண்டிய சூழ்நிலையை அவனுக்கு அமைத்துத் தந்து உதவவேண்டும். பள்ளியும் சிறுவனது ஆளுமை வளர்ச்சியில் ஈடுபட வேண்டியதே. வீட்டில் தக்க முறையில் பொருத்தப்பாடு உள்ளவர்களின் ஆளுமை மேன்மேலும் வளர் வதற்கும், சரியான பொருத்தப்பாடு பெறாமல் ஆளுமை வளர்ச்சி சீர்கெட்டவர்களைத் திருத்துவதற்கும் பள்ளிதான் பொறுப்பேற்க வேண்டும். எனவே, மாணாக்கர்களின் ஆளுமை வளர்ச்சியில் குடும்பம், சமூகம், பள்ளி ஆகிய மூன்றும் பங்கு பெறுகின்றன.

குடும்ப நிலைகள்: குடும்ப நிலைகள் குழந்தையின் பள்ளி வாழ்க்கையைப் பாதிக்கின்றன. குழந்தையின் பிறவிப் பண்பு களின் குறைபாடுகளைக் குடும்ப நிலைமைகள் நீக்கவும் கூடும்; அதிகப்படுத்தவும் கூடும்; குறைக்கவும் கூடும். பிறவிப் பண்புகளின் குறைபாடுகள் அதிகப்படின் குழந்தை, பள்ளி வாழ்க்கைக்குச் சரியாகப் பொருத்தப்பாடு அடைய முடியாது.

(i) காப்பின்மை[1]: சரியான பாதுகாப்பு இன்மையால் குழந்தையிடம் எழும் போராட்டங்களே அதிகமானவை: கொடுமையானவை. குழந்தைக்கு வேண்டிய உணவு, தேவை யான அன்பு, சரியான பயிற்சி, உண்மையான விடுதலை போன்றவை வீட்டில் கிடைத்தால் குழந்தை பள்ளியில் புகும் பொழுது நல்ல ஆளுமையுடன் திகழும். குழந்தையின் அக்கம்பக்க உறவு முறைகளும் செவ்விதின் அமைந்திருந்தால் இவ்வாளுமை இன்னும் சிறப்பாக இருக்கும்.

பெற்றோர் தன்மீது தக்க முறையில் அன்பும் ஆதரவும் காட்டாவிட்டாலும், தன்னிடமிருந்து மிதமிஞ்சிய உயர்நிலையை எதிர்பார்த்தாலும், குடும்ப ஒழுங்கை நிறைவேற்றுவதற்காகக் குழந்தையிடம் வசவுகளையும் தண்டனைகளையும் கையாண் டாலும் குழந்தை தன்னைப் பெற்றோர் புறக்கணிப்பதாகக் கருதும். புறக்கணிக்கும் சில பெற்றோர், தாம் குழந்தையை நடத்தும் முறை குழந்தையின் நன்மைக்கே என்று காரணமும் கற்பித்துக் கொள்வதை நாம் காண்கின்றோம்.


  1. 6. காப்பின்மை-Insecurity.