பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

346

கல்வி உளவியல் கோட்பாடுகள்


வலுச்சண்டைக்காரர்களாகவும் வளர்வர். சதா பிறருக்கு எரிச்சலையே விளைவிப்பர்.

(v) உயர்ந்த அறநெறிநிலை: சில பெற்றோர்கள் சமயக் குருக்கள் போன்று தம் குழவிகளிடம் உயர்ந்த அறநெறிகளைப் புகட்டுவதையே நோக்கமாகக்கொண்டிருப்பர். முதியோரது நெறிமுறைகளையெல்லாம் குழந்தைகளிடம் புகட்டவேண்டும் என்று சதா துடித்துகொண்டேயிருப்பர். இது தவறு, அது தவறு; விளையாடக்கூடாது; சீட்டாடக்கூடாது; படக் காட்சிக்குப் போகலாகாது; பெண்களுடன் பேசக் கூடாது: என்பன போன்ற கடுமையான அறநெறி நிலையை வற்புறுத்திக் கொண்டேயிருப்பர். இத்தகைய குழவிகளிடம் பயம் வளரும். அதிகக் கட்டுப்பட்டால் மனக்கோளாறுகளும் ஏற்படலாம்; புரட்சி மனப்பான்மையும் தோன்ற ஏதுவுண்டு. கட்டுப்பாடே கூடாது என்பது நம் கருத்தன்று; அது வேண்டும். கட்டுப்பாடு அளவோடு இருத்தல் வேண்டும் என்பதே நம் கட்சி. (vi) வறுமை: குடும்பத்தின் வறுமையும் குழந்தையின் வளர்ச்சியைப் பாதித்து, சரியான ஆளுமை வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. பசிப்பிணியால் வாடும் குழந்தை பிறருடன் நன்கு பழகாது; பழகவே தயங்கும். கிழிந்த காற்சட்டை, கந்தலான மேற்சட்டை, அழுக்குடன் கூடிய ஆடைகள், உடைந்த கற்பலகை, கிழிந்த நூல்கள் ஆகியவற்றுடன் பள்ளிக்கு வரும் குழந்தைகளை நாம் நாடோறும் காணத்தான் செய் கின்றோம். தம் பெற்றோருக்குத் துணையாக வீட்டிலோ, தோட்டத்திலோ கழனியிலோ அலுவல்களை முடித்துவிட்டு அவசர அவசரமாக நேரந்தவறி வருபவர்களின் எண்ணிக்கை சிறிதன்று: நாட்டுப்புறங்களிலுள்ள பள்ளிகளில் இது சர்வ சாதாரணம். இவர்கள் வீட்டிலோ படிக்க விளக்கு இராது; காற்றோட்ட வசதி இராது: போதுமான உணவுக்கும் வழி இல்லை; அந்த உணவும் தகுந்ததாக இராது. நூல்கள் வாங்கவும் பொருளாதார நிலை இடங்கொடுப்பதில்லை. பள்ளி வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் கொடுமையைச் சொல்லி முடியாது. இது கருதியே வள்ளுவப் பெருந்தகையும்,

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
கிச்ச நிரப்புக்கொன் றாங்கு[1]

[பொச்சாப்பு-மறதி; நிரப்பு.வறுமை]

என்று கூறிப் போந்தார். இக்குறளில் வறுமையின் கொடுமை உவமையாக நிழலுவதைக் காண்க. இந்நிலைகளையெல்லாம்


  1. 10. குறள்-235