பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல்பு பிறழ்ந்த நடத்தை

347


நன்கு உணர்ந்தே இலவசக் கல்வி, இலவச நூல், இலவசக் கற்பலகை, பகல் உணவு போன்ற திட்டங்களை அரசினர் ஏற்படுத்தியுள்ளனர். சில யாண்டுகளாக அத்திட்டம் நன்கு நடைபெற்றுவருவது மிகவும் பாராட்டத்தக்கது.

இனி பள்ளிச்சூழலில் நடத்தைப் பிறழ்வு நேரிடக் கூடிய காரணங்களைக் காண்போம்.

பள்ளிப் பழக்க வழக்கங்களின் விளைவுகள்

தேர்வுகள்: இன்றைய உலகில் மிகவும் கேடு விளைவிப்பது வரம்பிகந்த போட்டி மனப்பான்மையாகும். பள்ளிகளில் காண்ப்பெறும் அளவிறந்த போட்டி மனப்பான்மையைப்பற்றிச் சிறிது ஆராயவேண்டும். போட்டி மனப்பான்மைக்குப் பள்ளிகள் மிதமிஞ்சி இடந்தரலாகாது என்பது அறிஞர்களின் கருத்து. தேர்வுகள், மதிப்பெண்கள், வகுப்புகள், பரிசுகள் போன்றவை போட்டியை மிதமிஞ்சி வளர்க்கின்றன என்றும், அவற்றை அறவே ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும் கூறுவாரும் உளர். இவ்வித ஏற்பாடுகளில் மெதுவாகக் கற்போரும் சராசரி மாணாக்கர்களும்கூட மனந்தளர்ந்து போகின்றனர். விரைவாகக் கற்கும் மாணாக்கர்களும் தம் திறமைகளைப்பற்றித் :தலைக்கணம் கொண்டு பீடெய்துகின்றனர். அளவிறந்த போட்டி மனப்பான்மை பிறர்நலத்தைப் புறக்கணிக்கச் செய்து விடுகின்றது; தன்னலம் கருதும் தன்மையையும் வளர்க்கின்றது. தேர்வுகளால் வேறு பல தீங்குகளும் விளைகின்றன. போட்டிச் சூழ்நிலையில் மதிப்பெண்களை மாற்றும் அடிப்படை யாகக் கொண்ட நீண்ட தேர்வுகள் மாணாக்கர்களிடம் அதிகமான களைப்பையும் அலுப்பையும் விளைவிக்கின்றன. தேர்வுகளின் முடிவுகளைக் கொண்டே சில பெற்றோர்கள்--ஏன், சில பள்ளித் தணிக்கையாளரும்கூட-பள்ளிகளின் திறமையை அளக்க முற்படுகின்றளர்; பள்ளி ஆட்சியும் அதே அளவு கோலால் ஆசிரியர்களின் திறமையை அளக்கத் துணிந்து விடுகின்றது. மாணாக்கர்களின் திறனை அளக்க வேண்டிய தேர்வுகளின் முடிவுகளைக் கொண்டு இப்படி ஒவ்வொருவரும் தத்தமக்குத் தோன்றியவாறு செயற்படத் தொடங்குவது மிகவும் வருத்தப்படக்கூடிய தொன்று. இதனால் வேறு சொல்ல முடியாத விளைவுகளும் ஏற்படவும் கூடும்.

ஆசிரியரின் போக்கு: சில ஆசிரியர்களின் போக்கும் மாணாக்கர்களின் மனநலத்தைப் பாதிக்கக் கூடும். நிந்தை, மறைவசை,[1] கேலி, அவமானப்படுத்தல், அதிக வேலையிடல்,


  1. 11. மறைவசை-Sarcasm.