பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல்பு பிறழ்ந்த நடத்தை

357


திரும்பத் தவறும் சிறுவர்கள் உலகத்தில் எல்லாம் தவறாக அமைந்துள்ளன என்றும், தமக்கு வேண்டியவற்றை உலகம் கொடுக்காவிட்டால் தாமே அவற்றை எடுத்துக் கொள்ளலாம் என்றும் எண்ணுகின்றனர். பணம், நேர்த்தியான பொருள்கள், தின்பண்டங்கள், பிற உடைமைகள் போன்றவற்றில் ஆசை கொண்டு அவ்வாசை நிறைவேறாவிடில் சிறுவர்கள் தங்களால் இயன்ற முறைகளில் இவற்றைப் பெற முயலுகின்றனர்.[1] தம்மை எதிர்ப்பவர்கள் யாரும் தவறுடையவர்கள் என்றும், தம்மை அவர்கள் எதிர்க்குங்கால் அவர்கட்கு ஒரு பாடம் கற்பிக்கவேண்டும் என்றும் எண்ணுகின்றனர். இந்த நியாயத்தால் அவர்கள் ஏமாற்றவும் திருடவும் வழிகளை வகுக்கின்றனர். தம்மைத் தடைசெய்பவர்களையும் திட்டுகின்றனர். இறுதியாக சிறார் நீதிமன்றத்திற்கும் திருத்தப்பள்ளிகட்கும் கொண்டு வரப்பெறுகின்றனர் இங்கும் அவர்கள் திருந்துவதில்லை; இவர்கள் வளர்ந்து மனிதர்களாகி மேலும் பல தீச் செயல்கள் புரிந்து சிறை செல்கின்றனர்.

நெறி பிறழ்ந்தவர்கள் தம் தவறுக்காக வருந்துவதில்லை; தாம் பிடிபட்டதற்காகவே வருந்துகின்றனர். வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டு தீய நெறியில் நெஞ்சு உரம் பெறுகின்றது. கட்டுப்பாடு அதிகமாக ஆக அவர்கள் நடத்தை மேலும் கெடுகின்றது. தற்போதைய நிலைமைகளுடன் போராடுவதால் அவர்களது தற்பெருமைக்கு மனநிறைவு ஏற்படுகின்றது. தம்முடைய நெறிபிறழ்ந்த வாழ்க்கையைக் கைவிட்டால் தாம் கோழையாகி விடுவோம் என்ற உணர்ச்சி அவர்கள் மனத்தில் எழுகின்றது. தம்முடைய குற்றச் செயல்களால் அவர்கள் உள்ளம் மகிழ்ந்து தற்புகழ் எய்துகின்றனர். அப்படி இல்லா விட்டால், அவர்களால் இத்தீய வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்த முடியாது. இவர்களின் உள்ளக் கிளர்ச்சியின் சீர்குலைவே[2] பல்வேறு வித நெறி பிறழ்ந்த நடத்தைகளாகப் பரிணமிக்கின்றது. சிலரிடம் இது மடிமையையும் கவனக் குறைவையும் உண்டாக்கி அதனால் பிற்போக்குத் தன்மையை விளைவிக்கும்; வேறு சிலரிடம் அஃது உடல் ஆட்சியின்மையை உண்டாக்கி இயக்கக் குறைவினை விளைவிக்கும்; இன்னும்


  1. இக்கருத்துபற்றியே தொல்காப்பிய உரையாகிய ராகிய பேராசிரியர் வறுமை என்பதற்குப் 'போகந்துய்க்கப் பெறாத பற்றுள்ளம்' என்று பொருள் கூறினார் போலும். (தொல்-பொருள்-253-வது நூற்பாவின் உரை.)
  2. சீர்குலைவு-Disorder.