பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்திறனின்மை, கவர்ச்சியின்மை, மனவெழுச்சிக் கோளாறு, விபரீதச் சமூக மனப்பான்மை முதலிய அறிகுறிகளால் இத்தகைய பிரச்சினைகள் உளவென்பதை அறியலாம். விந்தையான நினைவுத் திறன், அளவு மிக்க புனைவுத் திறன்: மிதமிஞ்சிய தனிக் கவர்ச்சிகள், சிறப்புத் திறன்கள் ஆகிய வற்றைப்பற்றிய ஆலோசனை கூறவும் வல்லுநரைக் கலந்து கொள்ளலாம்.

(iii) வாழ்க்கை வரலாற்று முறை:[1] குழந்தை பிறந்தது முதல் அதன் வரலாற்றை எழுதிப் பயன்படுத்துவதுண்டு. மேனாட்டார் தங்கள் வீட்டுக் குழந்தைகளின் வரலாற்றைப் பற்றிப் பிறந்ததுமுதல் எழுதி வெளியிட்டுள்ளனர். என் செல்வமே, என் கண்மணியே என்று கொண்டாடும் பெற்றோரின் கண்ணுக்கு உண்மை உள்ளவாறு புலனாதல் அருமையினும் அருமை. அன்றியும், குழந்தைகளின் நடத்தைகளில் பல தங்களுக்கு விளங்காமையால் அவற்றைப்பற்றி ஒன்றும் எழுதாமலே அவர்கள் விட்டுவிடுவது முண்டு. பெரியோர்களின் வரலாறும் இங்கனம் எழுதப்பெறுகின்றது. இந்த வரலாறுகளினின்று மக்களின் உண்மைத் தன்மைகளையும் அவர்களுடைய எண்ணங்களையும் அறியலாம்.

இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இவ் வரலாறுகளைக் கொண்டு எழுதப் பெற்ற உளவியல் ஆராய்ச்சி. மேனாடுகளில் நூற்றுக் கணக்கான மேதைகளின் வாழ்க்கைக் கதைகளைக் கொண்டு-முக்கியமாக அவர்கள் சிறுவயதில் இயற்றிய கவிதைகள், படிக்கத் தொடங்கின வயது முதலியவற்றைச்சாதாரணக் குழந்தைகளின் செயல்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தனர். இத்தகைய் சிக்கலானதொரு முறையினை மேற் கொண்டு அவர்கள் உலகோர் மேதையர் என்று புகழ்ந்த சுமார் 3.0 பெருமக்களின் அறிதிறனை மதிப்பிட்டுள்ளனர்.

இவ் வாராய்ச்சியின் மூலம் அவர்கள் காட்டிய உண்மை ஒன்று உண்டு. உலகினர் மேதை என்று புகழும் மகன் சிறு வயதிலேயே தன் மேம்பாட்டைக் காட்டுகின்றான் என்பது. 'விளையும் பயிர் முளையிலே தெரியும்' என்பது நம்நாட்டுப் பழமொழியன்றோ? இப் பழமொழியிலும் மேற்குறிப்பிட்ட ஆராய்ச்சியின் சாயல் புலனாகின்றது.

மருத்துவ நிலைய முறை:[2] இம்முறை உளவியல் வளர்ச்சியில் கண்டறியப்பெற்ற புதிய கவர்ச்சிகளுள் ஒன்று. இம்முறை

  1. 51. வாழ்க்கை வரலாற்று முறை -Biographical method.
  2. 52. மருத்துவ நிலையமுறை-Clinical method