பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல்பு பிறழ்ந்த நடத்தை

365


கை வாய்க்கு எட்டாமல் ஏற்பாடு செய்து விடலாம். ஆனால், குழந்தை அப்பழக்கத்தை பிடிவாதமாக விரும்பி முயன்றால், நம்முடைய தடை இப்பழக்கத்தினை விடக் கேடு விளைவித்தல் கூடும். குழந்தை நாம் நினைப்பதுபோல ஒரு பொறியன்று: நம்முடைய விருப்பப்படி அதன் ஒர் உறுப்பினை இயக்க முடியாது. சில சமயம் நாம் மேற்கொள்ளும் தடையால் நரம்பு இறுக்கமும் சினமும் ஏற்பட்டு அவற்றால் குழந்தையின் உள வாழ்க்கை முழுவதும் பாதிக்கப்பெற்று விடும்.

சற்று வளர்ந்த குழந்தையிடம் ஒரு நல்ல இனிப்பைக் கொடுத்து அதனைச் சுவைக்கச் செய்து இப்பழக்கத்தை மாற்றலாம். இக் குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டு பலவிதமாகப் பராக்குக் காட்டிப் புற உலகில் அதன் கவனத்தைத் திருப்பிப் புதிய கவர்ச்சிகளை வளர்க்கலாம். இன்னும் சற்று வளர்ந்த சிறுவனானால் கைக்குத் தக்க வேலையைக் கொடுத்து இப்பழக்கத்தைத் தடுக்கலாம். தட்டுகள், பெட்டிகள், ஒன்றுக்குள் ஒன்று போகக்கூடிய கட்டைகள் அல்லது பாத்திரங்கள், போட்டுத் திறக்கக்கூடிய மூடிகளடங்கிய சாடிகள், திருப்பித் திருப்பிப் பார்க்கக்கூடிய கிழிக்கப்பெற முடியாத படங்களடங்கிய நூல்கள், உள்ளே போட்டு வெளியில் எடுக்கக்கூடிய பொருள்களடங்கிய பெட்டிகள், குழந்தைகள் எளிதில் கையாளக்கூடிய வேறு விளையாட்டுப் பொருள்கள் போன்றவற்றால் குழந்தைக்குக் கைவேலை கொடுத்து கை, வாய்க்குப் போகா வண்ணம் தடுக்கலாம். இவ்வித இயற்கை முறைகளில் இப் பழக்கத்தை நீக்க முடியாவிடில், குழந்தை வயது வந்தால் தானாக அப்பழக்கத்தை விட்டுவிடும் என எண்ணி வாளா இருத்தல் மேல். திட்டுவதோ, கடிவதோ, அச்சுறுத்துவதோ, வேறு வகையில் தொந்தரவு செய்வதோ கூடாது. இவற்றால் இன்னும் அதிகமாகத் தூண்டப்பெற்று, இப்பழக்கம் நன்கு வலியுறும். தலைவலி போய் திருகுவலி வந்ததாக முடியும்.

நகம் கடித்தல்

சிறுவர்களிடம் காணப்பெறும் நரம்பு நடுக்கத்திற்கு நகம் கடித்தல்[1] ஒர் அறிகுறியாகும். இவ்வாறு நடுக்கமுள்ள சிறுவர்கள் சாதாரணமாக அமைதியற்றிருப்பர்; பதற்றமுடையவராகவும் இருப்பர். இவர்கள் ஓரிடத்தில் அமர்ந்திருக்கமாட்டார்கள். முன்கோபம், அச்சம் ஆகியவை இவர்களிடம் காணப்பெறும். மிகச் சிறந்ததா என்றுகூட கவனிக்காமல்


  1. 34, நகம் கடித்தல் -Nail-biting,