பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

366

கல்வி உளவியல் கோட்பாடுகள்


இலகுவான செயல்களையே செய்யும் தன்மையுடையவர்கள் இவர்கள்.

இத்தகைய சிறுவர்களைப் பாதுகாப்புடன் கவனித்து அவர்களுடைய சிக்கல்களைத் தீர்க்க வழி காணல் வேண்டும். ஒவ்வொருவருடைய குறைகளையும் கூர்ந்து கவனித்து அறிந்து அவற்றிற்குத் தக்கவாறு அவர்கள் சமூகத்தில் நடந்துகொள்ளும் நெறியினில் உய்க்க வேண்டும். இவர்களிடம் தன்னம்பிக்கையை வளரச் செய்தல் சாலப் பயன் தரும். வெற்றியைப்போல் வெற்றி தருவது வேறொன்றும் இல்லையன்றோ?

பொய் சொல்லுதல்[1]

பொய்களில் பல வகைகள் உள. சில வேண்டுமென்றே உளம் அறிய உண்மையைத் திரித்துக் கூறப்பெறுபவை. ஏனையவை சூழ்நிலையின் காரணமாக ஏற்படுபவை. பொய் சொல்லுதல் என்பது ஒரு தற்காப்பு அல்லது தப்பும் வழி[2] அச்சத்தின் காரணமாகவோ பழிக்கஞ்சியோ அது மேற்கொள்ளப் பெறுகின்றது. பெரும்பான்மையான பொய்கள் மனச்சிக்கல் அல்லது போராட்டத்தின் காரணமாக எழுபவை. ஆகவே, பொய் சொல்லுவது ஒருவித உளநோய்; நடத்தைப் பிசகு அன்று. இப்பழக்கத்தினின்றும் குழவிகளை விடுவிக்க வேண்டுமாயின், பொய் சொல்லுவதற்குரிய காரணங்களை நாம் அறிய வேண்டும்.

காரணங்கள்: சிறுவர்களின் சொந்தக் காரியங்களில் வளர்ந்தவர்கள் அனாவசியமாகக் குறுக்கிடுவதால் பொய் பிறக்கின்றது. குழவிகள் இரகசியங்களைக் காப்பதற்கும், பிறரைப் பாதுகாக்கவும், திடீர்ச் செய்திகளை ஏற்றுக்கொள்ள ஆயத்தப் படுத்தவும் போன்ற சமூக நன்மை நோக்கங்களுக்காகப் பொய் சொல்லுகின்றனர். குழவிப் பருவத்தின் பொய்கள் யாவும் அவர்களுடைய வளமான கற்பனையின் காரணமாகவும், உண்மை நிலையையும் பாவனை நிலையையும் பிரித்தறிய முடியாததன் காரணமாகவும் எழுபவை. இளங்குமரப் பருவத்தில் பகற் கனவுகளின் காரணமாக எழும் பொய்களுக்கும் இக் காரணத்தையே பொருத்திக் கூறலாம். தெளிவற்ற பொய்க்குக் காரணம் உள்ளத்தினுள் நடைபெறும் போராட்டமே; பொய்யின் வடிவம், உள்ளே நசுக்கப்பெற்றுள்ள சிக்கலின் இயல்பினை


  1. 35. பொய் சொல்லுதல் - Lying.
  2. 36. தற்காப்பு அல்லது தப்பும் வழி -Defence or escape mechanism,