பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல்பு பிறழ்ந்த நடத்தை

367


உணர்த்தும் அறிகுறியாகும். சில சமயம் இளங்குமரப் பருவத்தினர் உண்மையை மிகைப்படக் கூறுதற் பொருட்டும் [1] பெருமைபடுத்திக் கொள்ளும் பொருட்டும் புனைந்துரைகளைப் பகர்வர்; பெரிய கதைகளைக் கட்டிவிடுவர். கேட்போர் கிளர்ச்சியுறும் பொருட்டும் ஒருவருடைய முக்கியத்துவத்தைப் பெருக்கிக் காட்டவும் இம்முறைகளைக் கையாளுவர். இதனால் அவர்களிடம் அடக்கப்பெற்றுக் கிடக்கும் தற்சாதிப்பு அல்லது முதன்மையூக்கத்திற்கு வெளியீடு கிடைக்கின்றது. இத்தகைய பொய்யர்கள் உண்மையிலேயே தாம் செப்பும் பொய்களை நம்புகின்றனர்; அடிக்கடி இவற்றைக் கூறுவதால் தம் நனவிலியுளத்தின் விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ளுகின்றனர்.

சிறுவயதில் உண்மையைத் திரித்துக் கூறும் நோக்கம், தற் காப்பின் பொருட்டும் அல்லது தண்டனையினின்று தன்னைக் காத்துக் கொள்ளும் பொருட்டுமே; சில சமயம் சிக்கல்களினின்றும் தன்னை விடுவித்துக்கொள்ளும் பொருட்டும் பொய் சொல்லப் பெறுகின்றது. குழந்தைகள் வளர வளர, சமூக நன்மை நோக்குடன் சொல்லப்பெறும் பொய்கள் குறைந்து, சமூகத்திற்குக் கேடுண்டாகும் பொய்கள் பெருகுகின்றன.

அன்றாட நிகழ்ச்சிகளால் ஏனைய பொய்கள் ஏற்படுகின்றன. முதியவர்கள் சொல்லும் பொய்களைக் கவனித்ததன் பயனால் சிறுவர்கள் பொய் சொல்லுகின்றனர். மூத்தோர் சிறார்கட்குக் கூறும் அறவுரைகளைவிட அவர்களின் செயல்களே சிறுவர்களை அதிகமாகப் பாதிக்கின்றன. அத்துடன் சமூகம் ஏற்காது என்று கருதும் செயல்கள் நேரிடும்போதெல்லாம் வழக்கமாகப் பொய்யையே புகலுகின்றனர். பெரும்பாலும், சிறுவர்களின் பொய்க்கு அச்சமே அடிப்படைக் காரணமாகும். பொய் சொல்லுவதைப்பற்றிப் பர்ட் [2] என்ற அறிஞர் கூறுவதாவது: பொய் சொல்லுதல் எண்ணற்ற வடிவங்கள் கொள்ளுகின்றது; அதற்கு ஆயிரக் கணக்கான பல்வேறுபட்ட ஊக்கிகள் காரணமாகலாம். அஃது அறிவு சார்ந்த குறைபாட்டிற்குப் பதிலீடு செய்யும் பொருட்டு மேற்கொள்ளப்பெறலாம். அச்சம் போன்ற ஏதாவதொரு உள்ளக் கிளர்ச்சியாலும் அது தூண்டப்பெறலாம்; ஆனால் பேராசை, சினம், தற்புகழ்ச்சி, பணிவு, தவறான பற்றுறுதி (Loyalty), தவறான அன்பு ஆகியவையும் அதற்குக் காரணமாகலாம்.[3]


  1. 37. மிகைபடக் கூறல் - Exaggeration.
  2. 38. பர்ட் - Burt.
  3. 39. Burt: The young delinquent.