பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

368

கல்வி உளவியல் கோட்பாடுகள்



தடுக்கும் வழிகள்: பொய் சொல்லுவதைத் தடுக்கும் வழிகள் யாவை? முதலாவது, ஒரு குழந்தை முதன் முதலில் பொய் சொல்ல முயற்சி செய்யும்பொழுதே அதனைக் கண்டறிந்து, அதனால் எந்தவித நன்மையையும் அடைய முடியாதென்றும், அதைக்காட்டிலும் வேறு முறைகளால் சிக்கல்களைச் சமாளிக்க முடியும் என்றும் அக்குழந்தை உணரும் முறையில் கூறவேண்டும். முதலில் இப்பழக்கத்தை வேரிலேயே களையவேண்டும். பொய் கேடான நிலையை உண்டாக்கிவிடும் என்பதைக் குழந்தை அறியும்படிச் செய்தல் வேண்டும்.

இரண்டாவது குழந்தைகளிடம் அஞ்சாதிருக்கும் பழக்கத்தை வளர்க்கவேண்டும். ‘அச்சமே கீழ்களது ஆசாரம்’. அறநெறித் துணிவு சமூகத்தால் அங்கீகரிக்கப் பெறல்வேண்டும். சில பெரியோர்களின் வரலாற்றிலிருந்து உண்மை விளம்பப் பயப்படாமையையும் அவர்கள் ஆற்றிய செயல்களையும் கொண்ட நிகழ்ச்சிகளைக் கூறுதல் இதற்கு பெருந்துணையாக இருக்கும்.

மூன்றாவது குறிப்பிட்ட காரணத்திற்குக் குறிப்பிட்ட சிகிச்சையே பயன் விளைவிக்கும். ஒரு மாணாக்கன் பிறர் மெச்சிக் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடு தன்னுடைய அல்லது தன் தந்தையினுடைய வீரச் செயல்களைப் பற்றிப் பொய் புகன்றால், அவன் விரும்பும் புகழை உண்மையாகப் பெற்றுக்கொள்ளும்படிச் செய்தல் வேண்டும்; அதற்குத் தகுந்த வாய்ப்பு தந்தால், அவன் அதில் சிறப்புறுவான். தண்டனைக்கு அஞ்சிப் பொய் கூறும் குழந்தைக்கு, அது செய்த குற்றத்திற்கு ஏற்ற நீதியான தண்டனை வழங்கி அதன் மூலம் உண்மை கூறும் படிச் செய்யலாம். குழந்தைகளின் முழு நிலைமையையும் சரியாகப் புரிந்து கொண்டால்தான் அவர்கள் கூறும் பொய்களை அறிந்து கொள்ளலாம்; தக்கவாறு அவர்களைச் சீர்திருத்தமும் செய்யலாம்.

தூக்கத்தில் சிறுநீர் கழித்தல்[1]

சிறு குழந்தையின் சிறுநீர்ப்பையைக் கட்டுப்படுத்திப் படுக்கையைச் சிறுநீரால் நனைக்காமலிருக்கச் செய்வது பெற்றோரின் கடமை. குழந்தை பிறந்த முதல் வாரம் தொடங்கி எந்தெந்த நேரங்களில் சிறுநீர் கழிக்கின்றது என்பதை அறிந்து கொள்ளலாம். இரவில் குறிப்பிட்ட நேரங்களில் குழந்தையை எடுத்து சிறுநீர் கழியவிட்டால், இரவில் குழந்தை சிறுநீரால் படுக்கையை நனைக்காது. காலையில் விழித்தெழுந்தவுடன் மலம், சிறுநீர் கழித்து, முகம், கைகால் கழுவி, சுத்தம் செய்து


  1. 40. தூக்கத்தில் சிறுநீர்கழித்தல். - Bed-wetting.