பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

374

கல்வி உளவியல் கோட்பாடுகள்


பாரபட்சம் காட்டுவது இங்கு விளைக்கும். ஒரு குழந்தையிடம் வெறுப்பு காட்டுவதும், பிற குழவிகளை விட அது குறைவுள்ளது என்று உணரச் செய்வதும் அதை அடிப்பதை விடக் கேட்டினை விளைவிப்பவை.

சில செயல்களில் ஏனையவர்களைவிட ஒரு குறிப்பிட்ட சிறுவன் மேம்பட்டவன் என்று ஒப்புக்கொள்ள வேண்டியதாக இருக்கும். மேல்வகுப்பு மாற்றம் செய்யும்பொழுது, சில தனிப்பட்ட சலுகைகள் தர நேரும் பொழுதும் பிற சிறுவர்கட்குத் தங்கள் குறைகள் உணர்த்தப் பெறுகின்றன. ஒருவருடைய திறமையைக் குறித்துச் சரியான மதிப்பை அவர், அறியச் செய்வதும், அதைப் பற்றிச் சரியான மனப்பான்மையை அவரிடம் வளரச் செய்வதும் கல்வியின் முக்கிய நோக்கமாகும். தம்மால் செய்ய முடியாத செயல்களும் உள என்றும், அவற்றைச் செய்யக் கூடியவர்கள்பால் பொறாமை கொள்வதால் தமக்கு யாதொரு பயனும் இல்லையென்றும், அவ்வாறு கொள்வதால் தம்மிடம் அத்திறன் வளராது என்றும் அவர்கள் அறியச் செய்தல் வேண்டும். இங்ஙனம் செய்தால், சிறுவர்களிடம் நல்ல மனப்பான்மை உண்டாகும்.

கூச்சம் (நாணும் தன்மை)

கூச்சம்[1] அல்லது பின்வாங்கும்[2] நடத்தை, பல குழவிகளிடம் பல பருவங்களிலும் பலவிதமாகக் காணப்பெறுகின்றன. அன்றாட வாழ்க்கையில் ஒரு குழந்தை தொடர்ந்து தோல்வியைக் காண்பதாலும், தன்னம்பிக்கைக் குன்றுவதாலும் கூச்சம் ஏற்படுகின்றது. கூச்சமுள்ள குழந்தை சாதாரணமாகத் தனிமையையே விரும்பும்.

கூச்சமுள்ள குழந்தையால் ஆசிரியருக்குத் தொல்லை யொன்றும் நேரிடாவிடினும், அக்குழந்தை பாதுகாப்பின்மையாலும் தேவைக் குறைவாலும் சொல்லொணாத் துன்பத்தை அநுபவிக்கின்றது. அது பகற்கனவு காணும்; பிற குழந்தைகளுடன் கலந்து பழகாது; தன்னுடைய கனவுலகத்திலேயே வாழ விரும்பும். சமூக விரோதமான இந்தப் பண்பை முளையிலேயே கிள்ளாவிட்டால், அது ஸ்கிசபிரினியா[3]. என்ற நோய்க்குக் காரணமாகிவிடும். கூச்சமுள்ள எல்லா குழந்தைகட்கும் உள நோய்கள் உண்டாகும் என்று சொல்லுவதற்கில்லை. எனினும்,


  1. 46. கூச்சம்-Shyness.
  2. 47, பின்வாங்கும்-Withdrawing.
  3. 48. ஸ்கிசபிரீனியா-Schizophrenia