பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

390

கல்வி உளவியல் கோட்பாடுகள்


அவனுடைய வன்மையான உள்ளக்கிளர்ச்சிகள் யாவும் அறிவை யொட்டியே காணப்பெறுகின்றன; ஒருமைப்பாடும் அடைகின்றன. ஏனைய பற்றுகளைவிட அறிவுப்பற்றே இவனிடம் மீதுார்ந்து நிற்கும்; இதுவே வாழ்க்கையில் முக்கியமானதாகவும் தோன்றும்.

இன்னொருவன் அரிச்சந்திரனைப்போல் சத்தியத்தையே குறிக்கோள் பொருளாகக் கொள்ளலாம். பிறிதொருவனுக்குக் காவியத் தலைவர்கள் குறிக்கோள் பொருள்களாக அமைய லாம், திருத்தொண்டர் புராணத்தில் வரும் அடியார்களின் வாழ்க்கை சிலருக்கு இலட்சியமாக அமையலாம். எனவே, வாழ்க்கையின் குறிக்கோள் ஒருவருடைய நடத்தையைத் தீர் மானிக்கின்றது. அதன் பொருட்டு அவன் எதையும் துறப் பதற்கு ஆயத்தமாக இருப்பான். காந்தியடிகளின் வாழ்க்கை இதற்கு ஒர் எடுத்துக்காட்டாக அமையும்.

தன்-மதிப்புப்பற்று: தன். மதிப்புப் பற்று என்பதை மேலே குறிப்பிட்டோம் அன்றோ? அஃது எங்ங்ணம் வளர்ச்சி பெறு கின்றது என்பதைச் சிறிது ஆராய்வோம். சிறுவன் இளமையிலேயே தன்னைச் சூழ்நிலையிலிருந்து பிரித்து அறிகின்றான். வெளியுலகுடன் தொடர்புபடுத்திக் கூறப் பெறாத அவன் அதுபவக் கூறுகள் யாவும் "திறன்" என்ற உட்கருவாக (Nucleus) அமைகின்றது. இதில் மொழி அவனுக்குத் துணையாக நிற் கின்றது; அவனுடைய சிறப்புப் பெயர் (இடுகுறிப்பெயர்) அவனுக்கு ஒரு கைப்பிடியாக அமைய, அதனைக்கொண்டு பிறவற்றைத் தன்னிலிருந்து பிரித்தறிகின்றான். தான் உயிரி என்றும், பொருள்கள் உயிரிலி என்றும், தான் எதைச் செய்ய இயலும், எதைச் செய்ய இயலாது என்பதையும் பாகுபடுத்தி உணர்கின்றான். நாளடைவில் தன்னுடைய நடத்தையையே திறனாயும் ஆற்றலையும் பெறுகின்றான். தன் தோழர்கள் தன்னைப் புகழ்வதையும் இகழ்வதையும் காண்கின்றான்; இச் சமூக அறிவினால் தன்னை இரண்டு நிலைகளில் அறிகின்றான். தான் சிந்தனையின் இலக்காகவும், சிந்தனையாளனாகவும் இருப்பதை உணர்கின்றான். படிப்படியாகத் தன்னுணர்ச்சி14 வளரத்தொடங்குகின்றது. இதிலிருந்துதான் தன் மதிப்புப் பற்று உண்டாகின்றது. இதைச் சுற்றித் தன்னெடுப்பு, தன்னொடுக்கம், அச்சம்,சினம் போன்ற உள்ளக் கிளர்ச்சிகள் அமைகின்றன. இப்பொழுது தன்னை ஒரு சில விருப்பு வெறுப்புகள், எண்ணங்கள், கருத்துகள், ஆற்றல்கள், திறன்கள், சுவைகள், வாழ்க்கைக் கோலங்கள் முதலியவற்றின் நிலைக்களனாகக் கருது-


14. தன்னுணர்ச்சி-Self-consciousness.