பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

396

கல்வி உளவியல் கோட்பாடுகள்


-யாலும், சிறந்த பெரியோர்களின் கருத்தேற்றத்தாலும் அவை உண்டாகின்றன" என்று கூறுகின்றார். சிறுவர்களின் வீர-வழி பாட்டாலும்35 இவை ஏற்படுகின்றன. பெரும்பாலோரது வாழ்வில் இந்த உயர்ந்த சமூக வளர்ச்சியைப் பெறுவதற்கு வாய்ப்புகள் அமைவதில்லை. சிறந்த அருங்குணங்களைக் கொண்ட உயர்ந்த தலைவர்களை அடிக்கடிச் சந்தித்து அவர்களுடன் பழகும் வாய்ப்புகளும் ஏற்படுவதில்லை. அன்றியும், அவர்கள் பழகும் தலைவர்களிடமும் பல குறைகள் குன்றின் மேல் விளக்குபோல் வெளிப்படையாகத் தெரிகின்றன. சிலர் நூல்களின்மூலம் உயிர்ப்பையும் உற்சாகத்தையும் பெறுகின்றனர்; ஆனால், நேர்முறையில் சிறந்த பெரியோர்களின் வாயிலாகப் பெறும் குறிக்கோள்களே நிறைந்த பலன்களை விளைவிக்கும். ஒரு குறிக்கோள்மீது நாம் கொள்ளும் ஆர்வத்திற்கேற்ப அதனை அடைய முற்படுவோம். நாம் மேற்கொள்ளும் குறிக்கோளைப் பற்றித் தெளிவான கருத்துடன் பல இடர்ப்பாடுகளையும் பொருட்படுத்தாது அவற்றை எதிர்த்துக் குறிக்கோளை நோக்கி முன்னேறினால், நல் வாழ்க்கையின் கொடுமுடியை எட்டிப் பிடிக்கலாம்.

குறிக்கோள் வளர்ச்சியால் உண்டாகும் வாழ்க்கைத் தத்துவம் நம் மனத்தையும் செயலையும் நெறிப்படுத்துகின்றது. வாழ்க்கைத் தத்துவம் என்பது ஓர் அரும்பொருளாக இருப்பினும், நாம் எல்லோரும் அறிந்தோ அறியாமலோ அதனை அமைத்துக் கொண்டுள்ளோம். நாம் மேற்கொண்டுள்ள குறிக்கோள்களுக்கேற்ப, வாழ்க்கையில் பலவற்றைத் தேர்ந்தெடுக்கின்றோம். குணம் நாடிக் குற்றம் நாடி, அவற்றுள் மிகை நாடி மிக்க கொள் கின்றோம். குணமும் குற்றமும் அவரவர் கொண்டுள்ள குறிக்கோள்களைப் பொறுத்தவை. சிறந்த கல்வியின் நோக்கம் என்ன என்பதை வள்ளுவப் பெருந்தகை,

கற்றதினால் ஆய பயனென்கொல் வாலறிவன்
கற்றாள் தொழாஅர் எனின்.38

என்று கூறுவர். 'அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே' என இலக்கண நூல் கூறும். இவையே நமது தன் மதிப்புப் பற்றாக அமைதல் வேண்டும். இந்த உயர்ந்த குறிக்கோள்களின் வளர்ச்சி குடும்பம், பள்ளி, சமூகம் என்ற சூழ்நிலைகளைப் பொறுத்தது.


35. வீரவழிபாடு-Hero-worship. 36. குறள்-2 37. நன்னூல்.நூற். 10.