பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வி உளவியலின் இயல்பும் அளவும்

23


உளவியலும் மெய்ப்பொருளியலும்: மெய்ப்பொருளியல்[1] என்பது மிக்க தொன்மையது; பண்டைய கிரேக்க, இந்தியக் காலங்களிலேயே தோன்றியது. மெய்ப்பொருளியல் உலகப் பொருள்களின் அடிப்படையான உண்மையை அறிய விரும்புகின்றது; உலகமனைத்தையும் பற்றியது. ஆனால், அறிவியல்கள் உலகின் ஒவ்வொரு பகுதியையும் துறையையும் பற்றியே ஆராய்கின்றன. முதலில் உளவியல் மெய்ப்பொருளியலின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது; பல்கலைக்கழகங்களிலும் உளவியல் மெய்ப்பொருளியலின் ஒரு பகுதியாகவே இருந்து வளர்ச்சியடைந்தது.

மெய்ப்பொருளியல் உண்மையான அறிவைப் பெற முயலுகின்றது; ஆனால் அறிவின் தன்மை, அறிவின் வளர்ச்சி போன்ற பிரச்சினைகள் உளவியலைச் சார்ந்தவை. இதைப் பொறுத்த மட்டிலும் ஏனைய அறிவியல்களைவிட உளவியலுக்கு ஒர் ஏற்ற முண்டு என்பது நினைவுகூர்தற்பாலது. அன்றியும், மெய்ப் பொருளியலின் பகுதிகளாகிய அறநூல்[2] , அளவைநூல்[3] போன்றவையும் உளவியலுடன் நெருங்கிய தொடர்புடையவை. மெய்ப்பொருளியலும் உளவியலும் நெருங்கிய தொடர்புடையவையாயினும், அவற்றுள் சில வேற்றுமைகளும் உள்ளன. மெய்ப்பொருளியல், நாம் காணும் உலகினைத் தோற்றம் என்று கூறும்; உளவியல், உலகை உண்மையென ஒப்புக்கொண்டு தன் ஆராய்ச்சியைத் தொடங்கும். முன்னது சோதனைகளைவிட அகக்காட்சியையே முக்கியமானதாகக் கருதுகின்றது; பின்னது பிற அறிவியல்களைப்போல் சோதனைகள், புள்ளிவிவரங்கள் போன்ற முறைகளை மேற்கொள்ளுகின்றது.

இவ்விடத்தில் கல்வி மெய்ப்பொருளியலுக்கும்[4] கல்வி உளவியலுக்கும் உள்ள தொடர்பையும் கவனித்தல் சாலப் பயன் தரும். கல்வி மெய்ப்பொருளியல் வாழ்க்கையின் பயன், உலகத்தின் கருத்து, கல்வி கற்றலின் காரணம் போன்ற பிரச்சினைகளை ஆய்கின்றது. கல்வியை அளிக்கும் முறை, உயர்ந்த குறிக்கோள்களை வளர்க்கும் வழிவகைகள், சுவையறிவை ஊட்டும் முறை, தவறான எண்ணங்களை அகற்றும் முறை, சிக்கனமாகக் கற்கும்முறை, நடத்தையின் வளர்ச்சி முறை, படித்தலைத்[5] தொடங்கும் காலம், எழுதுவதைத்


  1. 57. மைய்ப்பொருள்யல்-Philosophy.
  2. 58. அறநூல்-Ethics.
  3. 59. அளவை நூல்.Logic.
  4. 60. கல்வி மெய்ப்பொருளியல்-Educationa1 philosophy.
  5. 61. படித்தல்-Reading.