பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆசான்

419

வேறு. இதற்கு அவர் உளவியல் அறிவு நன்கு பெற்றிருத்தல் வேண்டும். தகுந்த எடுத்துக்காட்டுகளுடனும் குழந்தைகளின் அதுபவத்துடனும் தொடர்புபடுத்திக் கற்பிப்பது ஒரு தனித் திறனாகும். தெளிவாக உரைக்கும் ஆசிரியர்களையே குழந்தைகள் மிகவும் விரும்புவர்; உயிரற்ற முறையில் பயிற்றுவதைச் சிறுவர்கள் விரும்பார். கற்பித்தலை ஒரு பொழுதுபோக்காக மேற்கொள்பவர்களும் உளர்; பாடங்களைப் பசுமரத் தாணி போல் பதிய வைப்பவர்களும் உளர். ஆசிரியர்கள் சிறுவர்களிடம் அக்கறை காட்டி அவர்களுக்குத் துணைபுரியும் ஆயத்த முடையவராக இருத்தல் வேண்டும். கூலிக்கு மாரடிப்பவர்களாகத் தோன்றலாகாது. குழந்தைகளுடனிருந்து குழந்தை கட்காகவே வாழ்கின்றோம் என்ற எண்ணம் தலையாயது.

இவ்விடத்தில் ஆசிரியர்கள் ஒன்றினை நினைவில் இருத்துதல் வேண்டும். இன்றைய நிலையில் தம்முடைய பணிக்காகப் படி அளப்போர் வேறு; பணியின் பயனைப் பெறுவோர் வேறு. ஆட்சி ஊதியம் வழங்குகின்றது. சிறுவர்கள் படிக்க வருகின்றனர். ஊதியம் போதாது என்று கேட்கும் பிரச்சினை யையும் குழந்தைகட்குப் பயிற்றும் பிரச்சினையையும் ஒன்று சேர்த்துக் குட்டையைக் குழப்பக் கூடாது. ஊதியத்தை எண்ணி குழந்தைகட்குச் செய்யும் தெய்வப்பணியில் குறையிருக்குமாறு செய்யலாகாது.

ஆசிரியருக்கு நல்ல தோற்றம் வேண்டும். கவர்ச்சியான தோற்றம், தூய்மை, தோழமைத்தன்மை, நகைச்சுவை, பொறுமை, மரியாதை, நேர்மை, பாரபட்சமின்மை முதலிய பண்புகள் ஆசிரியருக்கு மிகவும் வேண்டற்பாலவை, பாலர்களின் கவர்ச்சிகளுக்கேற்பவும், அவர்களுடைய பல்வேறு திறன் களுக்கேற்பவும் கற்பிக்கும் முறைகளை மேற்கொண்டு கற்பிக்க வேண்டும்.

வகுப்பில் தலைமயிர் ஆற்றுதல், மேசையின்மேல் கால் களைப் போடுதல், அடிக்கடி மூக்குக்கண்ணாடியைக் கழற்றுதல், துடைத்தல், போடுதல், வகுப்பில் மூக்குப்பொடி போடுதல், சொந்த வரலாற்றை அடிக்கடிப் பேசுதல், கீச்சுக்குரல், மாறாத குரல், கூச்சல் போடுதல், அடிக்கடிக் கனைத்தல், தலையைச் சொரிதல் போன்ற சில தவறான பழக்கங்கள் சிறந்த பயிற்ற லுக்கு இடர்ப்பாடுகள் ஆகும். இவற்றை ஆசிரியர்கள் அறவே நீக்க வேண்டும்.

கற்றல் ஆசிரியருக்கும் வேண்டும்: ஆசிரியரும் தன் தொழிலில் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருத்தல் வேண்டும். பட்டக்கல்வி அல்லது பொதுக்கல்வி முடிவுற்ற-