பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

422

கல்வி உளவியல் கோட்பாடுகள்


வாய்ப்புகளைத் தருகின்றனர். ஆசிரியர்கள் அவ்வாய்ப்புகளை நன்முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இத்துறையினர் அடிக்கடி ஏற்பாடு செய்யும் கருத்தரங்குகள்,[1] பணிமனை முறை ஆராய்ச்சிகள்,[2] சொற்பொழிவுகள் ஆகியவற்றில் பங்கு பெறுதல் வேண்டும்.

ஆசிரியரின் தன்-மதிப்பீடு:[3] ஆசிரியரின் துலக்கமும் அவர் செய்யும் பணியின் மேம்பாடும் மாற்றங்களைக் கொண்டவை. ஆனால், மாற்றங்கள் யாவும் மேம்பாட்டைக் குறிக்கின்றன என்றும் சொல்லுவதற்கில்லை. எனவே, ஆசிரியர் தான் செய்யும் பணியிலுள்ள குறைகளைத் தொடர்ந்து அறிதலும், தான் ஒரு குறிப்பிட்ட முறையில் பணியை ஆற்றுவதன் காரணத்தையும், அம்முறை எவ்வாறு வெற்றிக்குக் கொண்டு செலுத்துகின்றது என்பதையும் ஆராய வேண்டுவது மிகவும் இன்றியமையாதது.

தான் செய்யும் வேலையை ஆசிரியர் மூன்று துறைகளில் ஆராயலாம்: (i) ஏட்டுப் படிப்புத் திறனில் காணப்பெறும் தனியாள் வேற்றுமைகளுக்குத் தான் செய்திருக்கும் ஏற்பாடுகள், (ii) தொழில் முறையில் தான் என்னென்ன விதங்களில் பங்கு பெற்றிருத்தல் என்பதுபற்றிய சிந்தனை, (iii) சிறுவர்கள் சமூக வளர்ச்சியில் முன்னேற்றம் அடைவதற்குத் தன்னால் மேற்கொள்ளப்பெற்ற வழிவகைகள். ஒவ்வொரு துறையிலும் பல சிறிய வினாக்களை எழுப்பிக்கொண்டு ஆராய்தலால். உண்மைநிலை எது எனக் காணலாம். தான் வகுப்பில் செய்வதற் கெல்லாம் பதிவேடுகள் வைத்திருந்தால், அவை ஒர் ஆசிரியரின் நிறைகளையும் குறைகளையும் எளிதில் அறிந்து கொள்ளும் மூலங்களாகப்'[4] பயன்படும்.

வகுப்பறைச் செயல்களில் மேம்பாடு: மேற்கூறியவாறு குறை களை யறிந்த ஆசிரியர் அக்குறைகளைக் களைவது எப்படி? இதற்கு ஒரு திட்டமுறை யொன்றும் இல்லை. அஃது ஆசிரியர். இதுகாறும் மேற்கொண்ட முறைகள், தான் மேற்கொண்டதன் மதிப்பீட்டுவகை, எத்துறைகளில் மேம்பாடு தேவை, அல்லது இயலும் என்பதை ஆசிரியர் அறிவது ஆகியவற்றைப் பொறுத்தது. ஆசிரியர் மேற்கொள்ளக்கூடிய ஒரு சில மாற்றங்களை ஈண்டு ஆராய்வோம்.


  1. கருத்தரங்குகள்-Seminar.
  2. பணிமனை முறை ஆராய்ச்சிகள்-Work shops.
  3. தன்.மதிப்பீடு-Self appraisal.
  4. மூலங்கள்-Sources