பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆசான்

429


பள்ளிகள் அவற்றிற்கு வாய்ப்புகள் தருவதில்லை. பயிற்சிக் கல்லூரிகளிலும் கூட இத் திறன்களை வளர்க்கும் முறை மனநிறைவு கொள்ளத் தக்கதாக இல்லை.

ஆசிரியர்-ஆட்சியினர் தொடர்பை மேம்பாடடையச் செய்தல்: பெரும்பாலான பள்ளிகளில் அடக்குமுறை ஆட்சியே நிலவுகின்றது. பள்ளிகளில் தொன்றுதொட்டு மேற்கொள்ளப் பெற்று வரும் பழைய முறைகளைக் கைவிட்டுப் புதிய முறைகளை வெறுக்கும் சர்வாதிகாரப் போக்குள்ள பல பள்ளித் தலைமையாசிரியர்களையும் பள்ளித் தணிக்கையாளர்களையும் இன்றும் நாம் காணாமல் இல்லை. தொடக்கநிலைப் பள்ளி ஆசிரியர்க் கூட்டங்களிலும், பள்ளிகளில் நடைபெறும் ஆசிரியர்க் கூட்டங்களிலும் முறையே பள்ளித் தணிக்கையாளரும் தலைமையாசிரியரும் ஆசிரியர்களின் விடுதலையுணர்வுடன் பேசும் பேச்சுக்குப் பதிலாகத் தம் கருத்திற்குத் தாளம் போடுவதையும் ஒத்து ஊதுவதையுமே விரும்புகின்றனர். சில கடினமான பிரச்சினைகளைத் தாம் எடுத்துக் கூறினால் தவறான எண்ணம் ஏற்படக்கூடும் என்று அஞ்சியே பலர் அங்ஙனம் எடுத்துக்கூறாது அமைகின்றனர். இத்தகைய தவறான ஆட்சிப் போக்கால் ஆசிரியரின் கற்பனைத்திறன் கெடுகின்றது; விடுதலையுணர்ச்சி சீரழிகின்றது; தன்-மதிப்பும் தளர்ந்து போய்விடுகின்றது. புதிய கல்விமுறைகளில் பயின்ற இளம் ஆசிரியர்கள் இச்சூழ்நிலையில் பொருத்தப்பாடடைவது இயலாததாகின்றது. வறுமைப் பிணியால் ஏற்படும் வாழ்க்கையைப்பற்றிய அச்சத்தால், அவர்கள் ஆட்சியின் கருத்துக்கிசையப் பொருத்தப் பாடடைந்து விடுகின்றனர்!

சுறுசுறுப்பான பங்கு தேவை: பள்ளி மேம்பாட்டின்நிமித்தம் ஆசிரியர் நிர்வாகத்துடன் பணித்துறைத் தொடர்பு கொள்ள விழைந்தால், பள்ளி நடைமுறையில் அவர் சுறுசுறுப்பான பங்கினைப் பெறுதல் வேண்டும்; இதனால் ஆசிரியர் தலைமை யாசிரியருடனோ, பள்ளித் தணிக்கையாளருடனோ நன்முறை யில் வேலை மூலம் தொடர்பு கொள்ளுதல் இயலும், இத்தகைய கூட்டுறவால் இரு சாராரிடையேயும் ஒருவரோடொருவரின் தன்-மதிப்பு வளர்கின்றது என்பது சமூக உளவியல்[1] காட்டும் உண்மை. இதனால் பெரும்பாலும் ஆட்சியாளருடனும் ஆசிரியர் ஒத்துழைக்க இயலும் என்பதைப் பலர் உணரமுடிகின்றது. தலைமையாசிரியர் (அல்லது பள்ளித் தணிக்கையாளர்) ஆசிரியர் உண்மையில் ஓர் உழைப்பாளி என்பதையும், அவர் சிலசமயம் தவறு இழைப்பினும் பள்ளி நலன் பொருட்டு உழைப்பதில்


  1. 27. சமூக உளவியல்-Social psychology.