பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

434

கல்வி உளவியல் கோட்பாடுகள்


ஆட்சியாளர், பெற்றோர், ஊரார் போன்ற பலருக்குச் சமாதானம் சொல்ல வேண்டியுள்ளது.

இன்னோர் இக்கட்டான நிலை ஆசிரியருக்குண்டு. இன்று நாட்டில் நிலவும் எந்தக் கட்சிகளிலும், கட்சி அரசியலிலும் ஆசிரியர் சேரக் கூடாதென்பது. இதைச் சரியென்றே ஒப்புக் கொள்வோம். பல கட்சியைச் சேர்ந்த பெற்றோர்களின் குழவிகள் பள்ளிக்கு வருகின்றனர். படிப்பதற்கென்றே அவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். ஆசிரியரும் பயிற்றுவதற்கென்றே பள்ளிக்கு வருகின்றார். இந்தப் பள்ளி நேரத்தைப் பாடம் பற்றிய செய்திகளைப் புகட்டுவதற்கு மட்டிலுமே பயன்படுத்த வேண்டும். தவிர, இளமைப் பருவம் அறிவு பெறுவதற்கென்றே ஒருவரது வாழ்க்கையில் ஒதுக்கப்பெற்ற பகுதி. அப்பருவத்தில் அறிவு பெறுவதற்கான செயல்களை மட்டிலுமே மேற்கொள்ள வேண்டும். இவை முழுவதும் சரியே.

ஆனால், பள்ளிக்கு வெளியிலேயும் ஆசிரியர் எந்தக் கட்சியிலும் சேரக்கூடாதா? சார்புடையவராக இருத்தல் கூடாதா? என்பது வினா. இஃது ஆசிரியர் சமூகத்திற்கே சவால் விடுக்கும் வினா. ஆசிரியப்பணி வழக்கத்திற்கு மாறான ஒரு பணி. ஆசிரியர், பள்ளியில் மட்டிலும் ஆசிரியர் என்ப தில்லை; வெளியிலும் ஆசிரியரே. அவருடைய வாழ்நாள் முழுவதும் அவர் ஆசிரியரே. மாணாக்கர்கள் பள்ளியில்தான் இருப்பார்கள் என்பதில்லை; எங்கும் இருப்பர். மாணாக்கர்களின் வீர வழிபாட்டிற்குரியவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், பேசும் ஒவ்வொரு சொல்லும் மாணாக்கர்களின் நடத்தையைப் பாதிக்கும்; அவர்களின் ஆளுமையை மாற்றும். எனவே, ஆசிரியர்கள் எந்தக் கட்சி யிலும் சேராது, சார்புடையவராக இராது இருப்பதுதான் மேல். இது விரதம் அதுட்டிப்பதைப் போன்ற கடுமையான சோதனை. ஆனால், பல சமயங்களில் சமூகமும் அரசியல் வாதிகளும் மாணாக்கர்களைத் தங்கட்குகந்த பல பொதுச் செயல்களில் ஈடுபடுத்துவதையும், சில சமயங்களில் சில ஆசிரியர்களை ஆட்சியாளருடன் முரண்படும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று வேண்டுமென்றே குற்றம் சாட்டிப்பேசுவைதயும், அதனால் வரும் கேட்டினையும் அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

ஆசிரியர்-சமூக உறுப்பினர்களில் ஒருவர்

மனிதன் ஒரு சமூகப் பிராணி. சமூகப் பண்பு நமது நரம்பில் துடிக்கின்றது. அஃது ஓர் இயல்பூக்கமாகும். சமூகத்தின் பாராட்டும், குறை கூறுதலும் நமது நடத்தையைப்