பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

கல்வி உளவியல் கோட்பாடுகள்


நன்கு அறிந்து புலப்பயிற்சிக்கு முதலிடம் அளித்துள்ளனர். மாண்டிசோரிக் கல்வி முறை புலப் பயிற்சியை வற்புறுத்துகின்றது. பள்ளியில் எழுதவும் படிக்கவும் மட்டில் வாய்ப்புகள் கொடுத்தல் போதாது. "சொற்களுக்கு முன் பொருள்கள்" என்ற கொள்கை குழந்தைக் கல்வியின் உயிர்நாடியாக இருத்தல் வேண்டும்.

புலப் பயிற்சியின் நோக்கம்: புலப்பயிற்சியால் புலன்களின் திறமையை அதிகரிக்கக் கூடுமா? என்ற வினா எழுதல் கூடும். இயற்கையாகக் குழந்தையிடம் ஏற்பட்டுள்ள திறமையை, அஃதாவது பொறிகளின் கூர்மையை, அதிகரிக்க முடியாது தான்; எனினும், பொறிகளால் அறிந்து கொள்ளக் கூடிய ஆற்றலைப் பயிற்சியினால் வளர்க்கலாம்; காட்சிகளை வேறு பிரித்து அறிந்து கொள்ளும் திறனை அதிகரிக்கவும் செய்யலாம். இயற்கையில் ஏற்பட்டுள்ள திறமைகளைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் எல்லாப் புலன்களுக்கும் கிடைப்பதில்லை. ஆகவே, பலதிறப்பட்ட பயிற்சிகளின் மூலம் எல்லாப் பொறிகளும் சுறுசுறுப்பாகச் செயலாற்றும் வாய்ப்புகள் தருதல் வேண்டும். உண்மையில், புலப்பயிற்சி என்பது புலத்தின் வாயிலாக மனத்திற்கு அளிக்கப் பெறும் பயிற்சியே என்பது தெளிவாகும். கண்ணையோ செவியையோ பழக்குவதென்பது உண்மையில் மனத்தைப் பழக்குவதாகவே கொள்ள வேண்டும். தக்க புலப் பயிற்சியினால் மூளையின் மையங்கள் இயைபு பெற்று மனமும் பண்படைகின்றது. மூன்று வயதிலிருந்து ஏழு வயது வரை குழந்தைகட்குப் புலப்பயிற்சி அளிப்பதற்குரிய காலம் என்று உளவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். மாண்டிசோரி முறையில் புலப்பயிற்சிக்கு வேண்டிய சாதனங்கள் அழகாக அமைந்துள்ளன. புலப்பயிற்சியுடன் மொழியறிவையும் தொடர்புபடுத்தப்பெற்றுள்ள அம்மையாரின் புலப்பயிற்சித் திட்டம் சிறந்து விளங்குகின்றது.

தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளிகளிலும் பொருள்களைப் புலன்கள் வாயிலாக அறியும் வாய்ப்புகளைக் கொடுக்கலாம். பொருட்காட்சிச்சாலை, பூங்கா, கடற்கரை, மிருகக் காட்சிச்சாலை, மலைகள், தொழிற்சாலைகள் முதலிய இடங்கட்குக் குழந்தைகளை அழைத்துச் சென்று பொருள்களை நேராக அறியும் வாய்ப்புகள் அளிக்கலாம். கைத்தொழில்கள் மூலம் அளிக்கப்பெறும் கல்வி ஓரளவு இதற்குத் துணை செய்கின்றது. உருவங்களை வரைதலும், அமைத்தலும், பாய்கள் பின்னுதலும், மைக்கூடு, கப்பல், விமானம், குருவி போன்ற வைகளைக் காகிதங்களால் செய்தலும், களிமண் வேலைகளும்,