பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

கல்வி உளவியல் கோட்பாடுகள்


அஃது ஒரு தனி மனவன்மையாக இருப்பின் ஏதாவது ஒரு சில வற்றில் உற்றுநோக்கல் பயிற்சியளிப்பின், பிறவற்றிலும் அத்திறன் கைவரப்பெறும். ஆனால், உண்மையில் ஒரு துறையில் திறமையாக உற்றுநோக்குபவர்கள் பிறவற்றில் திறமையாக அதைச் செய்ய முடிவதில்லை. [எ-டு]. கூலவாணிகத்தில் திறமையாகப் பொருள்களை உற்றுநோக்குவரிடம் வைரங்களை உற்று நோக்கும் திறனும் இருக்கும் என்று சொல்ல முடியாது. எனவே, உற்று நோக்கலில் மாணாக்கர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டுமாயின் அவர்கட்குப் பலதுறைகளில் கவர்ச்சிகளை எழுப்புதல் வேண்டும். அஃதுடன் வெவ்வேறு துறைகளிலும் கூடியமட்டில் நேரடியான அநுபவங்கள் ஏற்படும் வாய்ப்பகள் தருதல் வேண்டும். மேலும், இத்துறைகள் பல வற்றிலும் பலவிதத் தகவல்கள் தெரிந்திருத்தல் வேண்டும். இதை நிறைவேற்றுதற் பொருட்டே இன்று பள்ளிகளில் அடிக்கடிச் சுற்றுலாக்கள்[1] மேற்கொள்ளப் பெறுகின்றன. நகர்ப்புற மாணாக்கர்கள் நாட்டுப் புறத்திற்கும், நாட்டுப்புற மாணாக்கர்கள் நகர்ப்புறத்திற்கும் இருவரும் வரலாற்றுப் புகழ்ப்பெற்ற இடங்கள், மலைகள், ஆறுகள், அருவிகள், அணைத்தேக்கங்கள், மின்னாற்றல் நிலையங்கள் போன்ற இடங்களுக்கும் சென்று பலவற்றை உற்றுநோக்கி அறிதல் பெரிதும் பயன் விளைவிக்கும். சுற்றுலாவின்நோக்கம் முன்னரே உரைக்கப் பெற்று, சுற்றுலாவின் பொழுது பார்க்க வேண்டிய வற்றை விளக்கி, மாணாக்கர்களைக் குறிப்புகள் எடுக்கச் செய்து, சுற்றுலா முடிந்த பின்னர் கண்டும் கேட்டும் அறிந்தவற்றை ஆசிரியர்கள் மாணர்க்கர்களுடன் கலந்து பேசி, நினைப்பூட்டி, அனைத்தையும் திரட்டி நிரல்படக் கட்டுரையாகவோ, சொற்போர் மூலமாகவோ, வினாவிடை மூலமாகவோ வெளிப்படச் செய்தால் சுற்றுலாவின் முழுப்பயனையும் நன்கு அடையலாம்.


  1. சுற்றுலாக்கள்-Excursion