பக்கம்:கல்வி எனும் கண்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மழலையர் கல்வி

101


சென்ற தலைமுறைக்கும் இந்தத் தலைமுறைக்கும் பெருத்த மாறுபாடு உண்டாகிறதே என்று வருந்துவதால் என்ன பயன்? அண்மையில் தொலைக்காட்சியில் இத்தகைய ஒரு கதை (24.9.91) காட்டப்பெற்று சொந்த ஒரே மகள் வேறொருவனோடு சென்று மறைந்ததையும் பொருட்படுத்தாது, வாணிப வேலையிலே தந்தையும் உயர் சமுதாயச் சூழலிலே தாயும் சென்றதைக் காட்டியுள்ளது. இந்த நிலையில் தாய்ப்பாசமே அகன்றுவிட, அந்தப் பெண் இறுதியில் தாய் தந்தையைக் கண்டபோதும் களிப்பெய்தாது புதிய மனிதரைக் காண்பது போலவே நின்றாள். இது பெரும்பாலும் பெரும் செல்வர் வீடுகளிலும் தாய் தந்தையர் இருவரும் பணிபுரியும் வீடுகளிலும் நடைபெறும் நிகழ்ச்சி தானே. தாயன்பே இவ்வாறு இல்லையாகும்போது தாய் மொழிப்பற்றும் தாய்நாட்டுப் பற்றும் எப்படி அமையும்? இந்த நிலை நாட்டில் வளரின் ‘இந்திய நாட்டின் தென் கோடியில் தமிழ் என்ற ஒரு மொழி வழக்கில் இருந்தது’ என வரலாற்றில் படிக்கும் வகையிலும் தாய்நாடு பல வகையில் சிதறுண்டு போகும் வழியிலும் வருங்காலம் அமையுமே என்று யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த அவலநிலையை நீக்கினாலன்றி நாடு உய்யுமாறு இல்லை என்பது உறுதி.

இக்குறை நீக்க இராமமூர்த்திக் குழு சில விதிகளைக் காட்டியுள்ளது. (பக். 119) ஆனால் அரசாங்கம் அவற்றைப் பின்பற்ற வேண்டுமே. எத்தனையோ குழுக்கள் மத்திய மாநில அரசாங்கங்கள் விடுதலை பெற்றபின் நாள்தோறும் நியமிக்கின்றன. அவற்றின் பரிந்துரைகளை அப்படியே ஏற்றுச்செயல்படுத்தியுள்ளனவா? இல்லையே பேருக்குக் குழு அமைத்து ஊருக்கு உபதேசித்துச் செயலில் பின்னடையும் நிலை நாட்டில் இருக்கும் வரையில் நாடு நாடாகவா இருக்கும். எறும்புகள் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து நேரிய வழியில் செல்லுகின்றன. பறவைகள் மாலைப்பொழுதில் தம் கூடுநோக்கி விரைந்து பறக்கின்றன