பக்கம்:கல்வி எனும் கண்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

கல்வி எனும் கண்


விழும். இதே சமுதாய வாழ்வாக நாட்டுவாழ்வு அமைந்து விடலாம். இப்பயிற்சியும் அவ்வம்மக்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப, அந்நிய வாடை வீசாத வகையில் அமையவேண்டும். மாவட்டத்துக்கு ஒரு பயிற்சிப் பள்ளியாவது உடன் தொடங்க வேண்டும்.

நான் மேலே சுட்டியபடி குழந்தைகள் தாங்கள் வாழும் சமுதாயத்தை ஒட்டியே வளர்க்கப்பெறல் வேண்டும். இதனால் ஏழை ஏழையாகவே இருக்கவேண்டுமென்றோ செல்வன் மேலும் செல்வம் பெற்றவனாக ஆகவேண்டும் என்பதோ கருத்தன்று. புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்டது என்பதற்கு ஏற்ப யாரோ எப்படியோ வாழ்கிறார்கள் என்று அதற்காக நம் குழந்தைகளும் அந்த வழியில் படிக்க வேண்டுவதில்லை. ஏழை நாடாக உள்ள இந்தியாவில்-பெரும்பாலும் கிராமங்களே அமைந்த இந்தியாவில் அக்கிராமச் சூழ்நிலைக்கேற்ப ஆரம்பகல்வி அமையவேண்டும். இளங் குழந்தைகள் உள்ளத்தே தன் ஊர் தன் உறவினர், உற்றார், தன்னைப்போன்ற மக்கள், ஊர்புறச் சூழல் போன்ற வகையில் அமையப் பாடங்கள் சொல்லித்தர வேண்டும். பின் நான் ஆரம்பள்ளி பற்றிய எழுத்தில் காட்டிய படி வட்டம், மாவட்டம், மாநிலம், பிறகு, உலகம் என்று மெல்ல மெல்ல, வளர வேண்டும். இளங் குழந்தைகள் உள்ளம்-கண்ணாடி போன்ற உள்ளம்! எனவே தன் தாய் மொழி-தாய் தந்தை உற்றார் உறவினர் பற்று, ஊர்ப்பற்று முதலியன அமைய, பிறபின் தொடர வழி காட்டியாகப் பலவகையில் குழந்தைகள் கல்வி (0-6) அமைய வேண்டும். இது பற்றி இராமமூர்த்தி ஆய்வுக்குழு தெளிவாக இரண்டு பக்கங்கள் (125-126) பரிந்துரை செய்துள்ளது. அவற்றை மத்திய மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் இவ்வாறு இளங் குழந்தைகள் உள்ளத்தே நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் வளரும் வகையில் கல்வி முறை அமைப்பின் வரும் சந்ததி வளமுற்று வாழ வழி உண்டாகும். நாட்டு மக்கள் தாம் கொண்டுள்ள எல்லா வேற்றுமைகளையும் பிஞ்சு