பக்கம்:கல்வி எனும் கண்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8. தொழிற் கல்வி

தொழிற்கல்வி உரிமை பெற்றபின், சற்றே வளர்ந்திருக்கிறது என்பதை ஓரளவு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மத்திய மாநில அரசுகள் இத்துறையில் கருத்திருத்திச் செயலாற்றுகின்றன என்று சொல்லலாம். தமிழகச் சட்டமன்றத்திலே விரைவில் தொழில்துறையில் தமிழ்நாடு முதலிடம் பெறும் என முதல்வர் கூறியுள்ளதாகச் செய்தித். தாள்வழி அறிய முடிந்தது. மத்திய அரசும் தன் நேரடிப் பார்வையிலே நாட்டின் தேவைக்கேற்ற வகையில் நிறுவனங்களைப் பல மாநிலங்களில் அமைத்து வருவது எண்ணத் தக்கது. எனினும் பரந்த பாரதத்துக்கு இந்த வளர்ச்சி போதாது என்பதே அறிஞர்தம் முடிவு. அதற்கு ஏற்பத் தொழில் எவ்வளவு வளர்ச்சியடையினும் அதன் வழியே உருவாகும் பொருள்களின விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டேதான் போகிறது. இது வளரும் நாட்டுக்கு. ஏற்றதாகுமா?

என் இளமைக் காலத்திலே (1925-28) ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளில் நான் பயின்றபோது, ஏதாவது ஒரு தொழிலைக் கற்கவேண்டும் என்ற முறை இருந்தது. நான் பயின்ற வாலாஜாபாத் இந்துமத பாடசாலையில் பயிர்த் தொழில், பாய் நெய்தல், துணி நெசவு, நூல் நூற்றல், பொத்தான் செய்தல், தச்சவேலை, கயிறு திரித்துக் கூடை முதலியன செய்தல் போன்ற தொழில்கள் கற்றுத்தரப் பெற்றன். மாணவன் ஏதேனும் ஒரு தொழிலைத் தவறாது கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அப்படியே 1936இல் நான் பணியாற்றத் தொடங்கிய காஞ்சிபுரம் ஆந்திரசன் உயர்நிலைப்பள்ளியிலும் சில சிறு கைத்தொழில்கள் பாடத்